இந்தியாவின் அரசியலில் மிக முக்கியக் குற்றச்சாட்டு வாரிசு அரசியல். நீக்கமற எல்லா மாநிலத்திலும் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் தழைத்தோங்குகிறது.
வாரிசு அரசியலுக்கு எதிராக இருக்கிறோம் என்ற பிம்பத்தைக் கட்டமைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக-வின் நாடாளுமன்ற அமைச்சரவையில் கூட ஒரு முன்னாள் பிரதமரின் மகன், ஒரு முன்னாள் பிரதமரின் பேரன், மூன்று முன்னாள் முதல் அமைச்சர்களின் மகன்கள், ஐந்து முன்னாள் மத்திய அமைச்சர்களின் மகன்கள் என 20 வாரிசுகள் இருக்கின்றன.
இந்த நிலையில், இன்று காலை முதல் எக்ஸ் பக்கத்தில் அகிலேஷ் யாதவின் அரசியல் வாரிசு என அதிதி யாதவ் என்றப் பெயர் ட்ரெண்டில் இருந்தது.
சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் அவரின் மனைவி டிம்பிள் யாதவ் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்தவர் அதிதி யாதவ். 12-ம் வகுப்பு தேர்வில் 98 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற இவர், லக்னோவில் உள்ள லா மார்டினியர் பெண்கள் கல்லூரியில் படித்து முடித்திருக்கிறார். லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் அரசியல் மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக பயின்று வருகிறார். அதைத் தவிர, தேசிய அளவிலான குதிரை சவாரி சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது அகிலேஷ் யாதவ் நாடாளுமன்றத்துக்கு மகள் அதிதி யாதவையும், டிம்பிள் யாதவையும் அழைத்து வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, அகிலேஷ் யாதவின் அடுத்த அரசியல் வாரிசு அதிதி யாதவ்தான் என்ற தகவல் கசிந்தது.
மேலும், அதிதி யாதவ் தொடர்புடைய வீடியோகளும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக கட்சி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்தால், 2029 தேர்தலில் அவர் அறிமுகமாகலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவின் மரணத்திற்குப் பிறகு, 2022-ம் ஆண்டு அதிதி யாதவ் அரசியல் வட்டாரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது, மெயின்புரி மக்களவை இடைத்தேர்தல் தொடங்கியது.
அந்தத் தேர்தலில் அகிலேஷ் யாதவ்-வின் மனைவி டிம்பிள் யாதவ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இந்தத் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க அதிதி யாதவ் பிரசாரக் களத்தில் இறங்கினார். பிரச்சாரத்தை சிறப்பாகக் கையாண்டு, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்தார். கிராமப்புறங்களில் உள்ள பெண்களுடனும் உரையாடினார். அதனால், அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பது உறுதியானது.
அதிதி யாதவ்-ன் அரசியல் நுழைவு வாய்ப்பு குறித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், “என் மகள் அரசியல் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என விரும்பினோம். ஆனால் நாங்கள் அவளைக் கட்டாயப்படுத்தவுமில்லை, அவள் விருப்பத்தை தடுக்கவுமில்லை. அவளே கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் வலிகளையும் புரிந்துகொள்கிறாள். இந்த புரிதல் மிகவும் அவசியம். என் மூன்று குழந்தைகளும் சமூக வாழ்க்கையை ஆராய சுதந்திரம் வழங்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலின் போது செய்தியாளர்களிடம் பேசிய டிம்பிள் யாதவ், “அதிதி எனக்காக பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாமல், தனது வேர்களுடன் மீண்டும் இணைகிறார். மக்களுடன் நேரத்தைச் செலவிடுகிறார், அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்கிறார். என் குழந்தைகள் தங்கள் கனவுகளைத் தொடர நான் எப்போதும் ஆதரவளித்துள்ளேன்” என்றார்.
லக்னோவைச் சேர்ந்த டாக்டர். பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் சஷிகாந்த் பாண்டே, “அதிதி யாதவின் தொடர் அரசியல் செயல்பாடுகள், அவரை மூன்றாம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த சமாஜ்வாடி கட்சியின் ஒரு முக்கிய முயற்சியாகும். வயது வரம்பு காரணமாக தற்போது அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும், இளைய தலைமுறையினரை நோக்கிய ஒரு திட்டமிட்ட பங்கேற்பாகவே கருதுகிறேன்.

மற்ற கட்சிகளைப் போல பாசாங்கு செய்யாமல், சமாஜ்வாடி கட்சி அதிதியை சொந்தமாகக் கற்றுக்கொள்ளவும், வாக்காளர்களுடன் உணர்வுபூர்வமாக இணையவும், நடைமுறை அனுபவத்தைப் பெறவும் அனுமதிக்கிறார்கள். இந்த அணுகுமுறை கிராமப்புறங்களில் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்.
அரசியலமைப்பு வரம்புகள் காரணமாக, அதிதி 25 வயது வரை அதாவது, 2027-ல் நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது. ஆனால், 2029 மக்களவைத் தேர்தலில் போட்டியிட தகுதி பெறுவார். எனவே, அதற்குள் அவர் நன்கு தயாராக்கப்படுவார் எனக் கருதுகிறேன். தற்போதைக்கு, அதிதிக்கும் சமாஜ்வாடி கட்சியின் இளைஞர் பிரிவில் சிலப் பொறுப்புகள் வழங்கப்படலாம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
