“துண்டு சீட்டில் உள்ள கேள்வியை மட்டும் கேளுங்கள்; ப்ளீஸ்..” – பிரஸ் மீட்டில் தவித்த திமுக எம்பி

மாநிலங்களவை திமுக எம்பி கல்யாணசுந்தரம் திமுக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இவர் அடிக்கடி எதாவது சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை. இந்தநிலையில், கும்பகோணம் பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

அவரது உதவியாளர் அனைத்து செய்தியாளர்களுக்கும் அழைப்பு கொடுத்தார். இதையடுத்து கும்பகோணத்தில் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகத்தை சேர்ந்த ரிப்போர்டர்கள் மற்றும் கேமராமேன்கள் இதில் கலந்து கொண்டனர்.

திமுக எம்.பி கல்யாணசுந்தரம்

இதையடுத்து, கல்யாணசுந்தரத்தின் உதவியாளர், நான்கு செய்தியாளர்களிடம் மட்டும் கேள்வி எழுத்தப்பட்ட துண்டு சீட்டை கொடுத்து இதில் உள்ள கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்றார்.

அந்த துண்டு சீட்டில்,

  • உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பற்றி?,

  • ஆளுநரின் அடாவடி போக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • மும்மொழிக் கொள்கையை திமுக எதற்கு ஏற்றுக்கொள்ளவில்லை?

  • உச்சநீதிமன்றமே 10 மசோதாக்களுக்கு அனுமதி அளித்தது குறித்து?

ஆகிய 4 கேள்விகள் இருந்தது.

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கத்தான் எம்.பி தயாராகி வந்திருக்கிறார் எனவும் உதவியாளர் கூறியுள்ளார்.

இதனால் டென்ஷன் ஆன சில செய்தியாளர்கள் நீங்கள் சொல்கிற கேள்வியை கேட்க முடியாது, எங்களிடம் கேள்வி உள்ளது, நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என கூறி துண்டு சீட்டை திருப்பி கொடுத்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கல்யாணசுந்தரம் துண்டு சீட்டில் உள்ள கேள்வியை மட்டும் கேளுங்கள் என்றுள்ளார்.

இதைதொடர்ந்து, பேட்டி ஆரம்பிக்க, ஆளுங்கட்சி தரப்பினரால் நடத்தப்படும், பத்திரிக்கை, தொலைக்காட்சியைச் சேர்ந்த நிருபர்கள் மட்டும் துண்டு சீட்டில் உள்ள கேள்விகளை கேட்டனர். அப்போது, குறிப்பிட்ட அந்த கேள்விகளுக்கான பதிலை பேப்பரில் பார்த்து படிக்கத் தொடங்கினார்.

செய்தியாளர் சந்திப்பு துண்டு சீட்டில் கொடுக்கப்பட்ட கேள்வி

பின்னர் நிருபர்கள் கும்பகோணம் மாவட்டம் அறிவிப்பு உள்ளிட்ட சொந்தமாக கேட்ட கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியாமல் தலையை சொறிந்தபடி உதவியாளரை பார்த்தார். அவரும் சங்கடத்தில் நெளிந்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் உண்மையான செய்திகளை போட வேண்டும், தவறாக செய்திகளை போடுவதாக கூறி சம்மந்தமில்லாமல் பேசி சமாளித்தார்.

பேட்டி முடிந்த பிறகு, இதுபோல் கேள்வியை எழுதி கொடுத்து கேட்க சொல்வது எங்களை அவமதிக்கும் செயல் என மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் கல்யாணசுந்தரத்திடம் தெரிவித்தனர்.