அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வருவதற்காக, அந்த காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சுமதி என்பவருக்கு பாதிக்கப்பட்ட பெண் போன் செய்துள்ளார். ஆனால் அதற்கு சுமதி, அந்த பெண்ணிடம் கடுமையாக பேசி, போனை கட் செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண், உதவி ஆய்வாளர் தன்னை தரக்குறைவாக பேசிய அந்த ஆடியோ ஆதாரத்துடன் திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமாருக்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அரியலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தையும், அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளரையும் மைக்கில் தொடர்புகொண்ட திருச்சி டி.ஐ.ஜி வருண் குமார், ‘மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?’ என்று கேட்டதோடு, ‘சுமதி என்று யாராவது உங்கள் ஸ்டேஷனில் பணியாற்றுகிறாரா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு ஆய்வாளர், ‘ஆமாம் சார். உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்’ என்றதும், புகார் கொடுத்த பெண்ணிடம் சுமதி தரக்குறைவாக நடந்துகொண்டதை சுட்டிக்காட்ட, அதற்கு அந்த பெண் ஆய்வாளர், ‘தெரியாமல் பேசிவிட்டார் சார். நான் கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதனால் கோபமான டி.ஐ.ஜி வருண் குமார், ‘என்ன ஆய்வாளர் நீங்க…தெரியாம பேசிவிட்டாங்கன்னு சொல்றீங்க. வெட்கமா இல்லை. இதுதான் உங்க போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா?. எஸ்.ஐ பேசியதை மைக்கில் போடுகிறேன் பாருங்க. அவரை சஸ்பெண்ட் பண்ணுங்க. அவரை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தூக்கி அடித்தால் தெரியும். அவரை வந்து என்னைப் பார்க்கச் சொல்லுங்க’ என்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க, அந்த ஆய்வாளர் ஆடிப்போனார். அதன் பிறகு, அவரோடு மைக்கில் தொடர்பில் இருந்த ஆய்வாளரும், அரியலூர் மாவட்ட எஸ்.பி அலுவலக அதிகாரியும், ‘நடவடிக்கை எடுக்கிறோம் ஐயா’ என்று கூறுவதோடு, டி.ஐ.ஜி-யின் உரையாடல் முடிகிறது. இந்நிலையில், இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், அரியலூர் மாவட்ட போலீஸார் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றனர்.