Congress: “கட்சிக்காக வேலை செய்யாதவர்கள் விலகிவிடுங்கள்” – கார்கேவின் காட்டம் வேலை செய்யுமா?

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “கட்சிப் பணிகளில் உதவாதவர்களும், தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்களும் விலகிவிடுங்கள், ரிட்டையர்டு ஆகிவிடுங்கள்” எனக் காட்டமாக பேசியிருக்கிறார் கார்கே.

காங்கிரஸ் தலைவர்கள்

2014 – முதல் காங்கிரஸ் கட்சியின் தொடர் மூன்று நாடாளுமன்றத் தேர்தல்கள், பெருவாரியான சட்ட மன்றத் தேர்தல்களின் தோல்விகள் என சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், இந்தத் தோல்விகளுக்கு காரணமானவர்கள் கேள்விகேட்கவோ, அல்லது நடவடிக்கைக்குட்படுத்துவதோ அரிதாகவே நடந்திருக்கிறது.

இது தொடர்பாகப் பேசியிருக்கும் முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா, “ஒவ்வொரு தேர்தலிலும் கடினமாக உழைக்கும் கட்சியின் தொண்டர்கள், கட்சியின் தலைவர்கள் உழைக்காதபோது பெரிதாகக் கண்டுக்கொண்டதில்லை.

காங்கிரஸ் ஹரியானா, மத்தியப் பிரதேசத்தில் தோல்வியடைந்தது, டெல்லியில் சிறப்பாகச் செயல்படத் தவறிவிட்டது. ஆனால், இந்தத் தோல்விகளுக்குக் காரணமானவர்கள் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் கட்சியின் தொண்டர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சஞ்சய் ஜா
சஞ்சய் ஜா

தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டு தோல்வியடைந்தவர்களுக்கும் எந்த விளைவும் ஏற்படவில்லை, பொறுப்புக்கூறலுக்கான முக்கியத்துவம் காணப்படும் வரை, கட்சியின் தலைவர் நல்ல நோக்கத்துடன் கூறியிருந்தாலும் அதனால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. கட்சியின் உயர் தலைமை சொன்னபடி, கட்சியின் கீழ்மட்டத் தலைவர்கள் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை தொண்டர்களுக்கும் வராது” என வெளிப்படையாக விமர்சிக்கிறார்.

நடந்து முடிந்த மத்தியப் பிரதேச, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸின் உயர்மட்டத் தலைமை, அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களான கமல்நாத்தையும், பூபேந்திர் சிங் ஹூடாவையும் நம்பியிருந்தது. ஆனால், இரு மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு படுதோல்வி. அதற்கு காரணமான இரு மாநிலங்களின் தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை.

மத்தியப் பிரதேசத்தில், கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் மத்தியத் தலைமையை மட்டுமல்ல, காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த இந்திய கூட்டணிக் கட்சிகளையும் கடுமையாகத் தாக்கினார். காங்கிரஸுடன் கூட்டணி வைக்க விரும்பிய அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியையும் கமல்நாத் நிராகரித்தார். இது இரு கட்சிகளுக்கும் இடையே பதட்டங்களை ஏற்படுத்தியது.

கமல்நாத்
கமல்நாத்

ஹரியானாவில் வெற்றிக்கு அருகில் சென்ற காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆன பிறகும், இன்னும் ஹரியானா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கவில்லை. இந்த நிலையில் ”வேலைசெய்யாத தலைவர்கள் ரிட்டைர்டு ஆகிவிடுங்கள்” எனக் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சம் எழுந்திருக்கும் வேளையில், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கார்கேவின் கடுமையான எச்சரிக்கை வரவேற்கத்தக்கதுதான். ஆனால், கட்சியின் உயர் தலைமையின் பேச்சுக்கு கட்டுப்படும் கீழ்மட்டத் தலைவர்கள்தான் இப்போதும் இருக்கிறார்களா என்றக் கேள்விக்கு பதில் போகப் போகத் தெரியும்.