கோவை சிறுமிக்கு நடந்த அவலம்; முதல்வர் சஸ்பெண்ட்… பள்ளி நிர்வாகம் எழுதிய கடிதத்தில் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு சிறுமி பூப்பெய்திய காரணத்தால், அவரை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சொல்லி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

பள்ளிக்கல்வித் துறை

அதன்படி கோவை முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி,  தனியார் பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி புனித அந்தோனியம்மாள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள்.

`தனி பென்ச் ஒதுக்கி தர கேட்டோம்’

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், “எங்கள் மகள் கடந்த வாரம் பூப்பெய்தினார். பொதுவாக பெண் குழந்தைகள் பூப்பெய்தினால் வெளியில் எங்கும் அனுப்ப மாட்டோம். முழு ஆண்டு தேர்வு நடைபெறுவதால், அவளுக்கு தனி பென்ச் ஒதுக்கி தர கேட்டோம்.

தேர்வு

ஆனால் பள்ளி நிர்வாகம் தனி பென்ச் ஒதுக்காமல், வலுக்கட்டாயமாக 3 தேர்வுகளை வகுப்புக்கு  வெளியே அமர்ந்து எழுத சொல்லியது. ஒவ்வொரு தேர்வையும் சுமார் 2.30 மணி நேரம் படிக்கட்டில் அமர்ந்து எழுதி அவளுக்கு கால் வலி வந்து எங்களிடம் கூறினாள்.

புதன்கிழமை நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது, ‘இது என்ன அவ்வளவு பெரிய பிரச்னையா’ என்று சாதாரணமாக கேள்வி எழுப்பினார்கள். இதை அவர்கள் ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை. 

மாதவிடாய்

ஆசிரியைகள் கூட இதை புரிந்து கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலருக்கு தனியார் பள்ளி தாளாளர் எழுதியுள்ள கடிதத்தில், “எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்தினார். தற்போது பள்ளியில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால்,

பள்ளி கடிதம்

அந்த மாணவியின் தாயார் பள்ளி முதல்வர் ஆனந்திக்கு தொலைபேசி மூலம் அழைத்துள்ளார். தேர்வுபற்றி கேட்டதற்கு, பள்ளி முதல்வர் தேர்வு எழுதாவிட்டால் பரவாயில்லை என கூறினார்.

ஆனால், மாணவியின் தயார் அவரை தனியாக அமர்த்தி தேர்வு எழுத அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனால் அந்த மாணவியை தனியாக அமர்ந்து தேர்வு எழுத அனுமதியளித்தேன்.

சஸ்பெண்ட்

இருப்பினும் பள்ளி முதல்வரின் இச்செயல்பாடு இலவச கட்டாய கல்வி சட்டம் 2009 (17) விதிகளுக்கு எதிரானது. அதனால் பள்ளி நிர்வாகம் முதல்வரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிடுகிறது.” என்று கூறியுள்ளனர்.

காவல்துறை சார்பில் பொள்ளாச்சி ஏ.எஸ்.பி சிருஷ்டி சிங் அந்தப் பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தினார்.  பிறகு அவர் செய்தியாளர்களிடம், “தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்றும் அவர் சங்கோஜப்பட கூடாது என்றும் மாணவியின் தாய் தான் பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார்.

தமிழக காவல்துறை

இதே பள்ளியில் ஸ்டேஜில் அமர்ந்து 25 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் அவரை வகுப்பு அறைக்கு வெளியே அமர வைத்துள்ளனர். இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தன் எக்ஸ் தள பக்கத்தில், “தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அன்பில் மகேஸ்

குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக் கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை. நாங்கள் இருக்கிறோம். இருப்போம்.” என்று கூறியுள்ளார்.