கோவை: `பூப்பெய்த பட்டியலின சிறுமியை வகுப்பறை வாசலில் தேர்வெழுத வைத்த அவலம்’ – கண்டிக்கும் பெற்றோர்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அந்தப் பள்ளியில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

தேர்வு

இந்நிலையில் அந்த சிறுமி கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்தி உள்ளார். முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றுள்ளார்.

ஆனால், அந்த சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகம், வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த அவலம் நடந்துள்ளது. தகவலறிந்த சிறுமியின் தாய் பள்ளிக்குச் சென்று, தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அப்போது அவர், “எதற்காக இங்கு உட்கார்ந்து எழுதுகிறாய்.” என்று கேட்டார்.

அதற்கு சிறுமி, “பிரின்ஸிபள் மிஸ்.” என்று கூறினார். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளை அவர் வகுப்பறைக்குள் அமர்ந்து தான் எழுதியுள்ளார். வகுப்பாசிரியர் உள்ளே வர சொல்லியும், தலைமை ஆசிரியர் வெளியில் அமர்ந்து தேர்வு எழுத சொன்னதாக புகார் எழுந்துள்ளது.

“பூப்பெய்தினால் வகுப்புக்குள் அமர்ந்து எழுத முடியாதா.. வெளியில் தான் அமர வேண்டுமா.” என்று சிறுமியின் தாய் ஆதங்கத்துடன் கேட்கிறார். இருப்பினும் பள்ளி நிர்வாகம் முறையான பதில் அளிக்கவில்லை. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மாதவிடாய்

“பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல், பட்டியலின சிறுமியிடம் தீண்டாமை காட்டியதாக” பள்ளி நிர்வாகத்தின் செயல் சர்ச்சையாகியுள்ளது. அந்த பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.