டெல்லியில் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. பிறகு அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் முழுக்க, முழுக்க மக்கள் பிரச்னைகள் குறித்துத்தான் பேசினோம். தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு இருக்கிறது. எனவே அரசியல் குறித்துப் பேசவில்லை. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி அமைப்போம்” என்றார்.

கூட்டணியில் அதிமுக?
ஆனால் இந்த சந்திப்பின் பின்னணி குறித்து பேசும் விவரப்புள்ளிகள், “தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை இடம்பெறுவதற்கான முதல்படிதான் என்றுதான் இதை சொல்ல வேண்டும். அப்போது எடப்பாடி, ‘அண்ணாமலையை வைத்துக்கொண்டு கூட்டணி சாத்தியமாகாது. எப்படிச் சாத்தியமாகும்?. அவரை தலைவராக வைத்துக்கொண்டு எங்களது தொண்டர்கள் பா.ஜ.க-வுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை’ எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, ‘அண்ணாமலை விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என தெரிவித்திருக்கிறார்” என்றனர்.
தொண்டனாகவும் வேலை செய்யத் தயார்
இதையடுத்துதான் அண்ணாமலையும் டெல்லிக்கு சென்றிருந்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “எந்த பொறுப்பிலும், தொண்டனாகவும் வேலை செய்யத் தயாராக இருக்கிறேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்னையும் இருக்காது” எனத் தெரிவித்தார். இந்த சந்திப்பின் பின்னணி குறித்து பேசும் கமலாலய வட்டாரங்கள், “டெல்லி சென்ற அண்ணாமலை முதலில் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். ‘அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் சொல்லவில்லை’ என, ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்.

அதற்கு நட்டா தரப்பிலிருந்து ஆதரவாக எந்த பதிலும் வரவில்லையாம். இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு நடந்தது. அப்போது அமித் ஷா, ‘தி.மு.க-வை ஆட்சியைவிட்டு அகற்ற பலமான கூட்டணி அமைக்க வேண்டும். அதில் அ.தி.மு.க இடம்பெற்றாலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ எனக் கோபமாகப் பேசியிருக்கிறார். இதற்கு அண்ணாமலை, ‘தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதுதான் எனது ஒற்றை குறிக்கோள். அதற்கு நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு ஒரு தொண்டனாக பணியாற்றத் தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்” என்றனர்.
அண்ணாமலை மாற்றமா?
இதனால் அண்ணாமலை விரைவில் மாற்றப்படக்கூடும் என்கிற தகவல் வெளியானது. இதையடுத்து மாநில தலைவர் பதவியை பிடிக்க நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் நயினார் நாகேந்திரனும் டெல்லிக்கு சமீபத்தில் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தசூழலில் ராமேஸ்வரத்துக்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அண்ணாமலைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்கிற பேச்சு எழுந்தது. பிறகு, அது அரசு விழா, எம்.எல்.ஏ, எம்.பி-க்கள்தான் மேடையில் நிற்க முடியும் என்கிற விளக்கத்தை அண்ணாமலை கொடுத்திருந்தார். மேலும் மாநில தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இப்படியான பரபரப்பான அரசியல் சூழலில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வருகிறார்.
இதன் பின்னணி குறித்து பேசும் கமலாலய சீனியர்கள், “தமிழகம் வரும் அமித் ஷா கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரை சந்திக்கிறார். அவர்களின் கருக்களை பெற்றுக்கொண்ட பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதன்பிறகு கூட்டணி குறித்த அறிவிப்புகள் கூட வெளியாகலாம். மேலும் ஆடிட்டர் குருமூர்த்தியும் சந்தித்து பேச இருக்கிறார். அதில் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது” என்றனர்.
குருமூர்த்தி நாளை அமித் ஷாவை சந்தித்து பேச உள்ள நிலையில், அவருடன் அண்ணாமலை இன்று 1 மணி நேரம் சந்தித்துப் பேசினார். இதனிடையே பாஜக மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனு வழங்கலாம் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இப்படி அடுத்தடுத்த சந்திப்புகளாலும் அறிவிப்புகளாலும் பரபரத்து கிடக்கிறது கமலாலய வட்டாரம்!