குமரி அனந்தன்: “தமிழ் மொழியின் உண்மையான போராளி” – ராகுல் காந்தி, மோடி, கார்கே இரங்கல்!

பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையும் முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான குமரி அனந்தன் நேற்று இரவு காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று (09.04.2025) நடைபெறுகிறது. குமரி அனந்தன் மறைவுக்கு கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி இரங்கல்

அந்த வகையில் சமூக வலைதளங்களில் தன்னுடைய இரங்கலைப் பதிவு செய்துள்ளார் பிரதமர் மோடி.

“திரு குமரி அனந்தன் அவர்கள், மதிப்புமிகு சமூக சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார்.

மொழியையும், கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்துவதற்காகவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” எனத் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர்.

“உறுதியான காங்கிரஸ்காரர்”

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நம் மூத்த தலைவர் திரு.குமரி அனந்தன் மறைவு செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவர் ஒரு உறுதியான காங்கிரஸ்காரர், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அர்ப்பணிப்புள்ள போராளி.

தமிழ் மொழியை நாடாளுமன்றத்திற்கு எடுத்துவந்ததில் அவர் ஆற்றிய முக்கிய பங்கு, நீடித்த மரபாக நிலைத்திருக்கும்.

காமராஜரால் ஈர்க்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராகவும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

“உண்மையான போராளி” – ராகுல் புகழாரம்

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மூத்த தலைவர் திரு.குமரி அனந்தன் மறைவு செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன் – உண்மையான போராளி.

அவரது இடைவிடாத முயற்சிகள் தமிழ் மொழி நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க காரணமாக இருந்தன – அவை என்றும் நிலைத்திருக்கும்.

அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவகர், சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதியாக இருந்துள்ளார், காமராஜரின் பெருமைமிக்க சீடராக இருக்கிறார்.

அவரது குடும்பத்தினருக்கும், அவரது மறைவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.