`நேற்று கண்டித்த நீதிமன்றம்; இன்று ஆஜரான சீமான்!’ – 29-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக வருண் குமார் தரப்பு குற்றம்சாட்டியது. அதோடு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், வருண் குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதேபோல், வருண் குமாரும், சீமானை ‘திரள்நிதி சீமான்’ என்றும், ‘நாம் தமிழர் கட்சி தடை செய்யப்பட வேண்டிய இயக்கம்’ என்றும் விமர்சித்து, பரபரப்பை பற்ற வைத்தார்.

seeman

இந்த நிலையில், ‘சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று அந்த வழக்கு தொடர்பாக சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வேறொரு தேதியில் சீமான் ஆஜராக உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.  அதனையடுத்து ஏப்ரல் 8 – ம் தேதியான இன்று சீமான் ஆஜராக வேண்டும் என வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் நீதிபதி விஜயா முன்பு ஆஜரானார். அதேபோல, இந்த வழக்கை தாக்கல் செய்த தற்போதைய திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமாரும் இன்று ஆஜராகினார். இந்த வழக்கை நீதிபதி விசாரித்தார். அப்போது, வருண் குமார் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் தங்களுக்கு வேண்டும் என சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த ஆவணங்களை சீமான் தரப்பு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

varun kumar

அதன் காரணமாக, அந்த ஆவணங்கள் சீமான் தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். சீமான் மற்றும் டி.ஐ.ஜி வருண் குமார் இருவரும் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், நீதிமன்ற வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக, போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.