ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: “ஒவ்வொரு குடிமகனும் கொண்டாடும்படி இருக்கிறது” – காதர் மொகிதீன்

“தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் காலமெல்லாம் கொண்டாடும்படி அமைந்துள்ளது” என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“2025, ஏப்ரல், 8 – ம் தேதி, செவ்வாய்க் கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஆளுநர் பற்றிய தீர்ப்பு, உச்சியில் வைத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் காலமெல்லாம் கொண்டாடும்படியான அதி அற்புத தீர்ப்பாகிவிட்டது.

திராவிட மாடல் நல்லாட்சி நடத்திவரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் எதையும் எப்போதும் என்றென்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆதரிப்பதும், எதிர்ப்பதும், ஒத்துப்போவதும், வேறுபட்டு நிற்பதும் என்று தனது அரசியல் வாழ்க்கையாகக் கொண்டு, நாடும் ஏடும் நானிலமும் ஏற்றுப்போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

kathar mokitheen

இன்றைய அரசியல் தலைவர்களுக்கெல்லாம் எழிலார்ந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி விவகாரத்தில் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வந்த பொறுமை மிகுந்த பொன்னான சட்ட வழிமுறை இன்றைக்கு இந்தியா முழுவதும் பாராட்டும் படியானதொரு அணுகுமுறை என்பதை நிரூபித்திருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டவிதி 200 கூறுவது இதுதான். மாநில சட்டப்பேரவை எடுக்கும் முடிவுகளை – மசோதாக்களை – முன் வடிவுகளை, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பும்போது, ஆளுநர் ஒப்புதல் அளிக்கவோ, அதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவோ அல்லது திருப்பி அனுப்பவோ செய்வதற்குரிய காலக்கெடு `கூடிய விரைவு’ என்று விதித்திருக்கிறது.

இந்த `கூடிய விரைவு’ – `அஸ்ஸூன் அஸ் பாஸிப்பில்’ என்பதற்கான அர்த்தம் இதுவரை தெரியாமல் இருந்தது. அதற்குரிய விடிவு இன்றைக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் தாம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் வாழ்க. உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வென்றுள்ள தமிழக முதலமைச்சர் என்றும் வாழ்க.

தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் வெற்றியைத் தேடித்தந்தது மூலம் இந்தியாவுக்கே நேர்வழி காட்டிய இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கு அரும்பாடுபட்ட வழக்கறிஞர்கள் வாழ்க.

ஆளுநர் ரவி

தமிழ்நாடு என்றும் போராடும்… தமிழ்நாடு என்றும் வெல்லும். இதை நாளைய வரலாறு அடுக்கடுக்காகச் சொல்லும். தங்கத் தமிழகச் சட்டமன்றம் நிறைவேற்றிய கிடப்பில் கிடந்த பத்து மசோதாக்களும் இன்று முதல் சட்டமாகின்றன.

ஒவ்வொன்றும் தமிழகத்தின் பேரையும் புகழையும் இந்தியா முழுவதுக்கும் பரப்பும். நாட்டு மக்கள் நன்மைகள் பெற்று வாழ்வார்கள்.

வாழ்க தமிழ்நாடு. வெல்லுக தமிழ்நாடு. வாழ்க. வளர்க. வெல்க தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs