ஆங்கிலேயர் காலத்தில் நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்க கட்டப்பட்டது பாம்பன் ரயில் பாலம். 111 ஆண்டுகளை கடந்த பாலம் கடல் அரிப்பின் காரணமாக வலு இழந்தது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், புதிய ரயில் பாலம் ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவிலேயே கடல் மீது கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து தூக்கு பாலமான இந்த புதிய பாம்பன் ரயில் பாலத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் பயண திட்டம்
இதற்கென இலங்கை அனுராதபுரத்தில் இருந்து மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி நாளை காலை 11.50 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்தில் உள்ள மேடைக்கு செல்லும் பிரதமர், அங்கு நின்றவாறு புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் – தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையினையும் துவக்கி வைக்கிறார்.

இதன் பின் அங்கிருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சுற்றுலாத்துறை வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பின்னர் நிகழ்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகல் 3 மணிக்கு மண்டபம் முகாமில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்ல உள்ளார்.

பாதுகாப்பு பணிகள்
பிரதமரின் வருகையினை முன்னிட்டு தீவு முழுவதும் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சுமார் 4 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்டபம் முகாமில் இருந்து ராமேஸ்வரம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாம்பன், ராமேஸ்வரம் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பிரதமர் வருகைக்காண கான்வே ஒத்திகையும் இன்று நடத்தப்பட்டது.

இந்நிலையில் நாளை காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் ராமேஸ்வரம் நகர் பகுதிகளிலும் வாகன போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவசர தேவைகள் தவிர அனைத்து போக்குவரத்தும் மேற்கண்ட நேரத்தில் நிறுத்தப்பட உள்ளன. இதனால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா மற்றும் யாத்திரைவாசிகள் தங்கள் பயணத்தை இந்த வாகன தடைக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளும்படி மாவட்ட காவல்துறை அறித்துள்ளது.

இதே போல் ராமநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் வருவதை முன்னிட்டு நாளை காலை 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும், பிரதமர் வருகை நிறைவு பெற்ற பின் மாலை 3.30 மணிக்கு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருக்கோயில் நிர்வாகம் அறித்துள்ளது.!