“ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது நடைமுறைக்கு வரும்..” – நிர்மலா சீதாராமன் விளக்கம்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற அஜண்டாவை பா.ஜ.க தீவிரமாக நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. இன்னொரு புறம், ‘இது நடைமுறைச் சாத்தியமற்றது. கூட்டாட்சி முறைக்கு எதிரானது’ என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன. மோடி அரசோ, இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

‘நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநிலச் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியம்தான்’ என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறது ராம்நாத் கோவிந்த் குழு.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற் கொள்ள வேண்டும். மக்களவை, சட்ட மன்றங்கள் ஆகியவற்றுக்கான தேர்தலை முதல் சுற்றில் நடத்திவிட்டு, அடுத்த 100 நாள்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம். தொங்கு மக்களவை ஏற்பட்டாலோ, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றாலோ, மீதமுள்ள பதவிக்காலத்துக்குப் புதிய தேர்தலை நடத்தலாம்’ என்பன உள்ளிட்ட பரிந்துரைகளையும் ராம்நாத் கோவிந்த் குழுவால் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, மத்திய அரசால் குழு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, வரைவு மசோதா ஒன்று உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’  திட்டத்தை நடைமுறைப்படுத்த பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.

நிர்மலா சீதாராமன்

இதுகுறித்து இன்று (ஏப்ரல் 5) எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக விழாவில் பேசியிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒரே நாடு ஒரே தேர்தலை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம்; நாட்டின் நலனுக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இதற்கான நடைமுறையை குடியரசுத்தலைவர் தொடங்குவார். அதன் பிறகு தேர்தல் ஆணையத்திடம் அதிகாரம் வழங்கப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும். இதை நடைமுறைப்படுத்த குறைந்தது 2034ம் ஆண்டுவரை கால அவகாசம் தேவைப்படும்.” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Vikatan Whatsapp Channel