WAQF Bill: “நம்பிக்கை உடைந்துவிட்டது” – நிதிஷ் கட்சியில் இருந்து விலகிய 2 மூத்த நிர்வாகிகள்!

வக்ஃப் சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்ததனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இரண்டு மூத்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் செயல்படும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

Parliament

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வக்ஃப் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றியதைத் தொடர்ந்து முகமது காசிம் அன்சாரி மற்றும் முகமது நவாஸ் மாலிக் ஆகிய இரண்டு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு தனித்தனியாக எழுதிய கடிதத்தில் “ஐக்கிய ஜனதா தளம் மதசார்பற்ற கட்சி என எண்ணிய பல லட்சம் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

முகமது நவாஸ் மாலிக், வக்ஃப் சட்ட திருத்தம் அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள பல அடிப்படை உரிமைகளை மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சிறுபான்மை முன்னணியின் மாநிலச் செயலாளராக இருந்த இவர், இவரது கடிதத்தில், “வக்ஃப் மசோதா இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது. எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த மசோதா அரசியலமைப்பின் பல அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இந்த மசோதாவின் மூலம், இந்திய முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள், அவமதிக்கப்படுகிறார்கள். நீங்களோ அல்லது உங்கள் கட்சியோ இதை உணரவில்லை.” எனக் கூறியுள்ளார்.

மறுபுறம் அன்சாரி, “எங்களைப் போன்ற லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்கள், நீங்கள் முற்றிலும் மதச்சார்பற்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியவர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை நான் உரிய மரியாதையுடன் கூற விரும்புகிறேன்.

ஆனால் இப்போது அந்த நம்பிக்கை உடைந்துவிட்டது. இந்திய முஸ்லிம்களும் எங்களைப் போன்ற தொண்டர்களும் கட்சியின் நிலைப்பாட்டால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

மக்களவையில் மத்திய அமைச்சரும் ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ராஜீவ் ரஞ்சன் சிங் வக்ஃப் மசோதாவை ஆதரித்து, இந்த மசோதா வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதையும் முஸ்லிம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் நலனை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனப் பேசிய ஒரு நாளில் மூத்த உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் 12 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப் பிறகு வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்திருந்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel