சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம்: “ரயில்களை இயக்கும் உரிமை டெல்லி மெட்ரோவுக்கா?” – ராமதாஸ் கண்டனம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி எனக் கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இதனைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும்,

கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும்,

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் 118.9 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அன்புமணி, ராமதாஸ், ஜி.கே.மணி
அன்புமணி, ராமதாஸ், ஜி.கே.மணி

இந்தப் பாதைகளில் மெட்ரோ ரயில்களை இயக்கும் உரிமையை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்குச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.

இது சமூகநீதிக்கும், தமிழக இளைஞர்களின் நலனுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நடவடிக்கையால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போக்குவரத்தை இயக்கி, பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான பணியாளர்களைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்குப் பதிலாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனமே தேர்வு செய்து நியமிக்கும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தின் போக்குவரத்தை இயக்கிப் பராமரிக்கும் பணிகளைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமே செய்து வருகிறது.

அதனால், அதற்குத் தேவையான பணியாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்தப் பணியாளர்களுக்குத் தமிழ் மொழியில் பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, பணியாளர்கள் தேர்வில் 69 சதவிகித இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழக மக்களின் வேலைவாய்ப்பு உரிமையும், சமூகநீதியும் பாதுகாக்கப்படுகிறது.

ஆனால், சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட போக்குவரத்தை இயக்கும் பொறுப்பு டெல்லி மெட்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான பணியாளர்களை இந்தியா முழுவதிலும் இருந்து அந்த நிறுவனம் தேர்வு செய்யும்.

அதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்காது. அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டு முறையில் பின்பற்றப்படாது. இது சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

சென்னை மெட்ரோ

இவை அனைத்துக்கும் மேலாக, தமிழ் தெரியாத பணியாளர்கள் பணியமர்த்தப்படும்போது, அவர்களால் சென்னை மாநகர மக்களுக்குச் சரியாகச் சேவை செய்ய முடியாது.

தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதன்மை பங்குதாரர் தமிழக அரசுதான். தமிழக அரசிடம் கலந்து பேசி இந்த முடிவைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்ததா? அல்லது தன்னிச்சையாக எடுத்ததா? என்பது தெரியவில்லை.

இந்தச் சிக்கலில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழக நலனுக்கும், சமூகநீதிக்கும் எதிரான இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.” என்று ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs