Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ – அமித் ஷா காட்டம்

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்திருக்கிறார்.

வேணு கோபால்
வேணு கோபால்

வக்ஃப் திருத்த மசோதா

இதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி கே.சி. வேணுகோபால் இந்த மசோதா குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். அதாவது, “நீங்கள் கொண்டு வருகிற இந்த வகை மசோதாக்களில் (வக்ஃப் திருத்த மசோதா), திருத்தங்களை முன்மொழிய உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

நீங்கள் சட்டத்தை திணிக்கிறீர்கள். திருத்தங்களை முன்மொழிவதற்கு நேரம் கொடுக்க வேண்டும். பல விதிகளில் திருத்தம் செய்ய வேண்டியதுள்ளது. ஆனால் நீங்ககள் உரிய நேரத்தைக் கொடுப்பதில்லை” என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “கூட்டு நாடாளுமன்ற குழு அமைக்க வேண்டும் என்பது உங்கள் (எதிர்க்கட்சியின்) வலியுறுத்தலே. காங்கிரஸ் போன்ற ஒரு குழு எங்களிடம் இல்லை. எங்களிடம் ஆராய்ந்து முடிவு செய்யும் ஜனநாயகக் குழு தான் உள்ளது.

அமித்ஷா
அமித்ஷா

‘காங்கிரஸ் காலத்தில் இருந்த குழு வெறுமனே முத்திரை குத்துவதாக இருந்தது’. ஆனால் எங்கள் குழு விவாதிக்கிறது, ஆலோசிக்கிறது, விவாதத்தின் அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அந்த மாற்றங்களை ஏற்கப் போவதில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அர்த்தம் என்ன?” என்று பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார். தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.