`சென்னையை நாட்டின் 2வது தலைநகராக்க வேண்டும்’ – நயினார் கோரிக்கைக்கு பதில் கோரிக்கை வைத்த சபாநாயகர்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு பிறகு இன்று கூடியிருக்கிறது. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து ஒவ்வொரு துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நெடுஞ்சாலைத்துறை தொடர்பான விவாதம் நடைபெற இருக்கிறது.

இதில் பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “எம்ஜிஆர் காலத்தில் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்கான முயற்சிகளையும் அவர் எடுத்தார். அந்த வகையில் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்.

நயினார் நாகேந்திரன்

பரிசோதனை முறையில், திருச்சியில் ஏழு நாள் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தி பார்க்க வேண்டும். அப்போது, அலுவல் ரீதியாக என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என தெரிந்து கொள்ளலாம்” என்று கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

நயினார் நாகேந்திரன் பேச்சை இடைமறித்துப் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, “இந்தியாவின் தலைநகரை டெல்லியைப்போல, சென்னையை இரண்டாவது தலைநகராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு

அப்படி செய்தபிறகு உங்கள் கோரிக்கை பரிசீலிக்கலாம்” என்று நகைச்சுவையாகப் பேசினார். அதற்கு நயினார், “அதற்கான காலச் சூழல் ஏற்படும் பட்சத்தில் மாற்றப்படலாம்” என பதிலளித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Vikatan Whatsapp Channel