‘இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல்!’ ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.23 வரை கட்டணம்- RBI; ஸ்டாலின் கண்டனம்

வரும் மே மாதம் முதல், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏ.டி.எம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு ரூ.2-ல் இருந்து ரூ.23 வரை வங்கிகள் கட்டணம் விதிக்கலாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒன்றிய அரசு அனைவரையும் வங்கி கணக்கு தொடங்குமாறு அவசரப்படுத்தியது. அதன் பின்னர், பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்து டிஜிட்டல் இந்தியாவை முன்னுறுத்தியது.

அதற்கு பிறகு என்ன ஆனது? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம், வங்கி கணக்கில் குறைந்த பணயிருப்பிற்கு அபராதங்களை கொண்டுவந்தது.

வைப்பு நிதி, காப்பீடு…ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம்…

இப்போது இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஒரு மாதத்தில் பணம் எடுத்தால் ரூ.23 வரை வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறியுள்ளது.

இதனால், மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை விட அதிகம் எடுப்பார்கள். குறிப்பாக, ஏழைகளின் நிதி உள்ளடக்கத்தின் நோக்கங்களை பாதிக்கும்.

ஏற்கனவே நிதியின்றி தவிக்கும் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளும், எங்கள் கலைஞர் மகளிர் உரிமை திட்டப் பணப் பரிமாற்றங்களால் பயனடையும் ஏழைகளும் தான் இதன் மூலம் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல். ஏழைகளின் வாட்டம்; பணக்காரர்களின் புன்னகை” என்று பதிவிட்டிருக்கிறார்.