தவெக: “அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து இன்று பேசியிருக்கிறார்.

அப்போது, “நேற்று( மார்ச் 28) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பொதுமக்களின் பிரச்னைகளை முன்வைத்தோம்.

குறிப்பாக உசிலம்பட்டியில் காவலர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், சிவகங்கையில் பயிற்சி மருத்துவருக்கு நடந்த சம்பவம் போன்றவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு வர முயற்சி செய்தோம்.

அனுமதி கேட்டோம். ஆனால் அதனை அவர்கள் மறுத்து எங்களைத் திட்டமிட்டு வெளியேற்றி விட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க ஆட்சி எப்போது தமிழகத்தில் அமைக்கப்பட்டதோ அதிலிருந்து சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை எல்லாம் தொடர்கதை ஆகி இருக்கின்றன.

இதையெல்லாம் சட்டமன்றத்தில் சொல்ல முற்பட்டபோதுதான் எங்களை வெளியேற்றி விட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து தி.மு.க – த.வெ.க இடையேதான் போட்டி என்று விஜய் கூறியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அவருடைய கருத்தைச் சொல்லி இருக்கிறார். நாட்டில் எல்லாக் கட்சித் தலைவர்களும் அந்தக் கட்சி வளர்வதற்காகத் தொண்டனை உற்சாகப்படுத்துவதற்காக இதுபோன்ற கருத்துக்களைச் சொல்வார்கள்.

TVK Vijay
TVK Vijay

நாங்கள் பிரதான கட்சி என்று மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் எங்களைச் சொல்லவில்லை என்றால் அவரிடம்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்” என்றிருக்கிறார்.

செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று பதிலளித்திருக்கிறார்.