கோவை விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் வந்தது. அதில் ஒரு இளம் தம்பதி வந்திருந்தனர். அண்மையில் திருமணமான அந்த தம்பதியினர் ஹனிமூனுக்காக எகிப்து சென்றுவிட்டு கோவை திரும்பியுள்ளனர். அந்த தம்பதியை வரவேற்க அவர்களின் குடும்பத்தினரும் விமான நிலையம் வந்திருந்தனர்.

அப்போது அங்கு திடீரென ஒரு இளம்பெண் தம்பதி வெளியே வரும்போது, “என்னை கல்யாணம் பண்ணிட்டு அவக்கூட ஹனிமூன் போயிட்டு வரியா. பொம்பளை பொறுக்கி.” என்று திட்ட தொடங்கினார்.
தன் கணவரை மற்றொரு பெண் திட்டுவதை பார்த்து என்ன செய்வதென்று அறியால் மனைவி திகைத்து நின்றார். அந்த இளைஞரின் உறவினர் ஒருவர் இளம் பெண்ணின் கையை பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயற்சி செய்தார். தம்பதி அங்கிருந்து காரில் கிளம்பினர். இளம்பெண் அவர்களை பின் தொடர்ந்து சென்று,

“அவனை நம்பாதே.. அவன் பொம்பளை பொறுக்கி.” என்று கூச்சலிட்டார். ஆனால் இளைஞரின் உறவினர் பெண்ணின் கையை விடவே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் அவரின் கன்னத்தில் அறைந்தார்.
மேலும் அவரின் சட்டையைப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். “காசு இருந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணுவீங்களா.” என்று ஆவேசமாக கேட்டார். சுற்றி பலர் வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.

அவர்களை பார்த்து, “இவ்ளோ பேர் வீடியோ எடுக்கறீங்க. அவனை யாராவது பிடிச்சீங்களா. அவன் மேல பீளமேடு ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துருக்கேன்.” என்றும் அந்த பெண் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொழிலதிபர் ஒருவரின் மகனான அந்த இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அந்த இளம்பெண்ணுடன் பழகி காதலித்துள்ளனர். பிறகு இளைஞருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானதால் அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்கு இளைஞர் இந்த பெண்ணுக்கு தாலி கட்டி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே மற்றொரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதால், அவர் ஆத்திரமடைந்து விமான நிலையத்தில் பிரச்னை செய்துள்ளார். இது குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.