`ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்’ – அண்ணன் மகன் கைது சிக்கலில் ஆர்.காமராஜ்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன். அரசு முதல் நிலை ஒப்பந்ததாரரான இவர் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சாலை, கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் டெண்டர் எடுத்து செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி காரைக்காலில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதாயளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோருடன் ஒப்பந்ததாரர் இளமுருகன் இருந்துள்ளார்.

ஆர்.காமராஜ் அண்ணன் மகன் இளமுருகன்

காரைக்காலில் நடைபெற உள்ள சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான சாலை உள்ளிட்ட பணிகளுக்கு அப்போது லஞ்சம் கொடுக்கப்பட இருப்பதாக முன்கூட்டியே சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இளமுருகன் ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை அப்போது கொடுத்ததாக சொல்கிறார்கள். இதையடுத்து அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள் தங்கும் விடுதிக்குள் சென்று சோதனை நடத்தியதுடன் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதைதொடர்ந்து தீனதயாளன், சிதம்பரநாதன், இளமுருகன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இதைதொடர்ந்து, தீனதயாளன் வீடு, சிதம்பரநாதன் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த விவகாரத்தில் மொத்தம் ரூ.75 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி மட்டுமின்றி ஆர்.காமராஜின் அண்ணன் மகனான மன்னார்குடியில் உள்ள இளமுருகன் வீட்டிலும் சோதனை நடைபெற்றதால் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இளமுருகன் கைது செய்யப்பட்டிருப்பது ஆர்.காமராஜிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆர்.காமராஜ்

இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் சிலரிடம் பேசினோம், ஆர்.காமராஜின் அக்கா மகன் ஆர்.ஜி.குமார், சம்பந்தி உறவான சேரன்குளம் மனோகரன், வீரசேகரன், பேரளம் சி.பி.ஜி அன்பு உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் பலர் அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர்களாக இருக்கின்றனர்.

ஆர்.காமராஜின் அண்ணன் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நடனசிகாமணியின் மகன் இளமுருகன். இவர் மன்னார்குடி அஷேசம் பகுதியில் வசிக்கிறார். இவரும் முதல்நிலை ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.

தஞ்சாவூர், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டங்களில் நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையில் பல பணிகளை ஒப்பந்தம் எடுத்து இவர்கள் செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளமுருகன்

பின்னணியில் இருந்து ஆர்.காமராஜ் இவர்களை ஒருங்கிணைப்பதாக சொல்லப்படுகிறது. திமுக ஆட்சியில் கூட ஒப்பந்த பணியில் இவர்கள் கோலேச்சுவதாக திமுக தரப்பை சேர்ந்த ஒப்பந்ததாரர்களால் பேசப்படுகிறது.

இளமுருகன் காரைக்காலில் கோடி கணக்கிலான பணிகளை செய்து வருகிறார். இது தொடர்பாக அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த போது தான் சிபிஐயிடம் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார்குடியில், இளமுருகன் வீட்டில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே, ஆர்.காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பலவேறு ஆவணங்கள் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஆர்.காமராஜ்

தன் தலைக்கு மேல் கத்தி தொங்குவதால் முன்பு போல் ஆர்.காமராஜ் திமுக அரசை விமர்சிப்பது இல்லை என்கிற விமர்சனமும் அவர் மீது நிலவுகிறது.

இந்த நிலையில், இளமுருகன் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அவரது வீட்டில் இருந்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இந்த விவகாரத்தால் ஆர்.காமராஜிக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது என்றனர்.

ஆர்.காமராஜ் தரப்பிலோ, இளமுருகன் சொந்தமாக அவரது தொழிலை கவனித்து வந்தார். அண்ணன் மகன் என்பதால் அவர் கைது கவனம் பெற்று அரசியல் ரீதியாக பலராலும் பேசப்படுகிறது. இதனால் ஆர்.காமராஜிக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel