ஏக்நாத் ஷிண்டே விவகாரம்: “மன்னிப்பு கேட்கப் போவதில்லை” – ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா பதிலடி!

மகராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா, தனது நிகழ்ச்சி ஒன்றில் ‘தில் தோஹ் பகல் ஹைய்’ என்ற இந்திப் படத்தின் பிரபலமான பாடலைப் பாடி, மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நேரடியாக குறிப்பிடாமல் துரோகி என மறைமுகமாக பகடி செய்திருந்தார். மேலும் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் பிளவுகளையும் கேலி செய்திருந்தார். குணாலின் இந்த அரசியல் நையாண்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த சிவசேனா ஆதரவாளர்கள், அவர் காமெடி நிகழ்ச்சி நடத்திய ஸ்டுடியோவை (க்ளப்) அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து அம்மாநில முதல்வர் பட்னாவிஸ் கூட கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர சட்டசபையிலேயே கூறியிருந்தார்.

இந்த சர்ச்சைகள் குறித்து பேசியிருக்கும் ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா “ஒரு நகைச்சுவையாளரின் பேச்சுக்காக, அவர் நின்று நகைச்சுவை செய்த இடத்தை தாக்குவதென்பது,

குணால் கம்ரா

உங்களுக்கு பட்டர் சிக்கன் பிடிக்காதென தக்காளி கொண்டு செல்லும் லாரியை வழிமறிப்பது போன்றொரு செயல். நான் சொன்னதெல்லாம், அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே குறித்து கூறியவைதான்; ஆகவே நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. உங்களால் ஒரு நகைச்சுவையை உள்வாங்க முடியவில்லை என்பதற்காக, எனக்கு உரிமை கிடையாது என ஆகிவிடாது அரசியல் என இங்கு நடக்கும் சர்க்கஸை நகைச்சுவை செய்யக்கூடாது என சட்டமேதும் இல்லை; என் அடுத்த நிகழ்ச்சியை நடத்த, மும்பையில் உடனடியாக இடிக்கப்பட வேண்டிய ஒரு இடத்தை தேர்ந்தெடுக்க இருக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.