“கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு; ஆனால்…”-காமெடியன் குணால் கம்ரா குறித்து ஏக்நாத் ஷிண்டே

மகராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா, தனது நிகழ்ச்சி ஒன்றில் ‘தில் தோஹ் பகல் ஹைய்’ என்ற இந்திப் படத்தின் பிரபலமான பாடலைப் பாடி, மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நேரடியாக குறிப்பிடாமல் துரோகி என மறைமுகமாக பகடி செய்திருந்தார். மேலும் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் பிளவுகளையும் கேலி செய்திருந்தார். குணாலின் இந்த அரசியல் நையாண்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருகிறது.

குணால் கம்ராவின் அரசியல் நையாண்டி பேச்சால் ஆத்திரமடைந்த சிவசேனா ஆதரவாளர்கள், அவர் காமெடி நிகழ்ச்சி நடத்திய ஸ்டுடியோவை (க்ளப்) அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து குணால், “உங்களால் ஒரு நகைச்சுவையை உள்வாங்க முடியவில்லை. கருத்துச் சுதந்திரம் எல்லோருக்குமான உரிமை. நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை.” என்று பதிலளித்திருந்தார். இது சர்ச்சைகளை இன்னும் கிளரிவிட்டிருந்தது.

தற்போது ஏக்நாத் ஷிண்டே இந்த விவகாரம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், “கருத்துச் சுதந்திரமனாது எல்லோருக்கும் உண்டு. ஆனால், சிலர் அதைச் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

அந்த நபர் என்னை மட்டுமல்ல பிரதமர் உட்பட நாட்டின் மதிப்பு மிக்கத் தலைவர்களை காமெடி என்ற பெயரில் உள்நோக்கத்துடன் விமர்சித்திருக்கிறார். அதற்காக வன்முறை, அடித்து உடைத்து பொருட்சேதங்களை ஏற்படுத்துவதை நான் ஆதரிக்கவில்லை. அவருக்குப் பின்னால் ஏதோ அரசியல் பின்புலம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.