Kerala: “நாட்டுக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர்..” – SFI பேனரால் ஆவேசமான கேரள கவர்னர்

கேரள மாநிலத்தில் இப்போதைய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும், ஆளும் சி.பி.எம் அரசும் இணக்கமாக உள்ளது. கடந்த வாரத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, கேரள கவர்னர் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் சேர்ந்து சென்று சந்தித்து மாநிலத்துக்கு நிதிகேட்ட ஆச்சர்ய நிகழ்வு நடந்தது.

இந்த நிலையில் காலிகட் (கோழிக்கோடு) பல்கலை கழகத்தின் செனட் கூட்டத்தில் கலந்துகொள்ள பல்கலைகழக வேந்தரான கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்றார்.

கோழிக்கோடு பல்கலைகழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்

அப்போது பல்கலைகழக வளாகத்தில் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ சார்பில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில், ‘எங்களுக்கு சான்சிலர்தான் (வேந்தர்) வேண்டும் சாவர்க்கர் அல்ல’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இது கவர்னருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பல்கலைகழக கூட்டத்தில் பேசிய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “இந்த பல்கலை கழகத்துக்குள் வந்ததும் ஒரு பேனரை பார்த்தேன். எங்களுக்கு சான்சிலர்தான் வேண்டும் சாவர்க்கர் அல்ல என அதில் குறிப்பிட்டிருந்தனர். என்ன சிந்தனை இது? சாவர்கர் என்று தேச விரோதி ஆனார்.

சாவர்க்கர் என்ன செய்தார். சரியாக படித்தால் அவரைப்பற்றிய விஷயங்கள் புரியும். தேசத்துக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர்.

பிறரின் நன்மைக்காகத்தான் சாவர்க்கர் செயல்பட்டார். வீட்டைப்பற்றியோ, வீட்டில் உள்ளவர்களைப்பற்றியோ, குடும்பத்தைப்பற்றியோ அவர் சிந்திக்கவில்லை. மாறாக இந்த சமூகத்தைப்பற்றிதான் அவர் எப்போதும் சிந்தித்தார்.

நாட்டுக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர். இப்பட்டிப்பட்ட பேனர்கள் பல்கலைகழக வளாகத்தில் வருகின்றன என்பதை துணை வேந்தர் கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றார்.

கோழிக்கோடு பல்கலைகழகத்தில் கேரள கவர்னர்

இப்போதைய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கும் கேரள அரசுக்கும் நல்ல இணக்கம் உள்ளது.

முந்தைய கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும் அரசுக்கும் பல்கலைகழக நியமனங்கள் சம்பந்தமாக பிரச்னை இருந்துவந்தது. இதையடுத்து எஸ்.எஃப்.ஐ மாணவர் அமைப்பினர் ஆரிப் முகம்மதுகானுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினார். அந்த சமயத்தில் வைக்கப்பட்ட பேனர் அது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் முன்னிலையில் அந்த பேனர் அகற்றப்பட்டது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel