Trump: ‘அமெரிக்க கல்வித்துறையை கலைக்க கையெழுத்திட்ட ட்ரம்ப்…’ – காரணம் என்ன?!

நேற்று அமெரிக்க அரசின் கல்வித்துறையைக் கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க கல்வி மையங்களில் மூன்றாம் பாலினம் பற்றி போதிக்கிறார்கள், போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் போன்ற பல விஷயங்களுக்கு அமெரிக்க கல்வித்துறையை கடுமையாகச் சாடி வந்தார் ட்ரம்ப். தேர்தல் பிரசாரத்தின்போது, தான் அதிபரானால் அமெரிக்க கல்வித்துறையைக் கலைப்பேன் என்ற வாக்குறுதியைக் கூறியிருந்தார் ட்ரம்ப். சொன்னதை தற்போது செய்துள்ளார்.

இந்தத் துறையை கலைத்ததற்கு ட்ரம்ப் கூறும் காரணம், “பிற நாடுகளை விட, அமெரிக்கா கல்விக்காக அதிக செலவுகளை செய்து வருகிறது. அமெரிக்க கல்வித்துறை என்று ஒன்று இருந்தும், அமெரிக்க மாணவர்கள் கல்வி பட்டியலில் மிகவும் கீழே தான் உள்ளார்கள்” என்பதாகும்.

காரணம் என்ன?!

இவரின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருமா என்பது பெரிய சந்தேகம் தான். அரசு சார்ந்த ஒரு துறையை கலைக்கும்போது, அதற்கு கண்டிப்பாக காங்கிரஸின் ஆதரவும் வேண்டும். அமெரிக்க கல்வி துறையை கலைக்கும் உத்தரவிற்கு காங்கிரஸின் ஆதரவு கிடைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இன்னொரு பக்கம், இந்தத் துறையை கலைத்தால் அமெரிக்காவில் கல்வியின் எதிர்காலம், கல்வி கடன்களை வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகள் எழும். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.

ஆக, இது அமலுக்கு வருமா…வராதா என்பது காங்கிரஸ் முடிவை பொறுத்தது.