தொகுதி மறுசீரமைப்பு: “கூட்டாட்சி தத்துவத்திற்கு பொருள் இருக்காது”- 7 முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படும் மாநிலங்கள் அடங்கிய கூட்டம் நாளை சென்னையில் நடக்க உள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்பதுதான் தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது. தி.மு.க ஏன் இதைப் பேசுபொருள் ஆக்குகிறது என்றால் 2026-ம் ஆண்டு கட்டாயம் தொகுதி மறுசீரமைப்பு நடந்தே ஆக வேண்டும். அப்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் நமது எம்.பிக்களின் எண்ணிக்கை குறையும். இதை உணர்ந்துதான் நாம் முதலில் குரல் எழுப்பியுள்ளோம்.

இது எம்.பிக்களின் எண்ணிக்கை பிரச்னை இல்லை. இது தமிழ்நாட்டின் உரிமை பிரச்னை. இதனால் தான், அனைத்து கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டது. பா.ஜ.க-வை தவிர அனைத்து கட்சிகளும் ஓர் அணியில் நின்று நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களையும் ஒன்றுக்கூட்டி பேச வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதனால், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதலமைச்சர்களிடமும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள இந்த மாநிலங்களின் அனைத்து கட்சிகளின் தலைமைகளுக்கும் நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்.பி அடங்கிய குழு நேரில் சந்தித்து, விளக்கி அவர்களிடம் வழங்கினார்கள்.

அனைத்து மாநில முதல்வர்களிடமும் நானே போனில் பேசினேன். இதைத்தொடர்ந்து சிலர் நேரடியாக வருவதாகவும், சிலர் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள சந்திப்புகள் காரணங்களினால் அவர்களது பிரதிநிதிகளை அனுப்புவதாகக் கூறியுள்ளார்கள். அனைவரும் சேர்ந்து நடத்தும் கூட்டம் நாளை (மார்ச் 22) சென்னையில் நடக்க உள்ளது.

எதற்கு இந்தக் கூட்டம் என்று பலர் கேட்கிறார்கள்? தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டால், இந்தியாவில் கூட்டாட்சி என்ற தத்துவத்திற்குப் பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பு இருக்காது. நாடாளுமன்றத்தில் நமது குரல் நசுக்கப்படும். நமது உரிமைகளை நிலைநாட்ட முடியாது. இது மாநிலங்களை அவமதிக்கும் செயல். எனவே, மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பு செயல்படுத்திய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை தரக்கூடாது.

அதனால் தான், தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் சிந்தனைப்படி மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கும் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதனடிப்படையில் அடுத்துக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். நம்முடைய நியாயமான கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். இது இந்தியாவைக் காக்கும்” என்று பேசியுள்ளார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks