கர்நாடக அமைச்சர்களை, எம்.எல்.ஏக்களை honey trap-ல் சிக்கவைக்க முயற்சிகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக சட்டமன்றக் கூட்டம் நடந்துவரும் நிலையில், பா.ஜ.க-வின் முன்னாள் அமைச்சர் வி.சுனில் குமார் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது, காங்கிரஸ் அரசு “honey trap தொழிற்சாலை” நடத்துகிறது. இது தொடர்பான உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் விவாதக்களத்துக்கு நகர்ந்தது.

இது தொடர்பாக பேசிய விஜயபுரா எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னல், “கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணாவை honey trap-ல் சிக்க வைக்க முயற்சி நடந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது” என்றார்.
இதை ஒப்புக்கொண்ட அமைச்சர் ராஜண்ணா, “துமகூருவைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க அமைச்சர் ஒருவர் honey trap-ல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகா ஒரு சிடி மற்றும் பென் டிரைவ் தொழிற்சாலையாக மாறிவிட்டதாக பலர் கூறுகிறார்கள். இந்தப் பிரச்னை நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல – இது தேசிய அளவில் நீண்டுள்ளது.
என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் இங்கு பதிலளிக்க மாட்டேன். உள்துறை அமைச்சரிடம் எழுத்துப்பூர்வ புகார் அளிப்பேன். இது விசாரிக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்
கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோளி, “கர்நாடக மாநிலத்தின் மூத்த அமைச்சர் ஒருவரை honey trap-ல் சிக்க வைக்க இரண்டு முறை முயற்சிகள் நடந்தன. ஆனால், அது வெற்றிப்பேறவில்லை. இப்படி நடப்பது முதல் முறையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக honey trap நடந்து வருகிறது. காங்கிரஸ், பா.ஜ.க, ஜே.டி.எஸ் என எந்தக் கட்சியும் இதிலிருந்து தப்பிக்கவில்லை.
எனவே இதுதொடர்பாக புகார் பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோரியுள்ளோம். பாதிக்கப்பட்டவரையும் முன்வந்து புகாரளிக்கக் கூறியிருக்கிறோம். 48 அரசியல்வாதிகள் இதில் சிக்கியதாக கூட்டுறவு அமைச்சர் கூறுகிறார்” என்றார்.
இதைத் தொடர்ந்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா, “honey trap முயற்சி குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்படும்” என அறிவித்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
