திருவாரூர் மாவட்டம், தென்னவராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 75 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள், பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். சென்ற மாத்திரத்தில் அவர்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட… பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

இது போன்று பல மாணவர்கள் மருத்துவமனைக்கு வர… மேற்கொண்டு அவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவர்களில் 36 மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் சென்று சந்தித்து நலன் விசாரித்தார். தொடர்ந்து மதிய உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முனைவர் ரா.ராஜா (பொது தகவல் அலுவலரிடம்) நேரில் சென்று விளக்கம் கேட்டோம். “தென்னவாரிய நல்லூர் தென்னவராயநல்லூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவான கொண்டைக்கடலை புளிக்குழம்பு உட்கொண்ட 36 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் நான்கு மாணவர்களை மட்டும் தொடர் கண்காணிப்பில் வைத்து கொண்டு மற்ற மாணவ மாணவிகளை பெற்றோர்கள் உடன் அனுப்பி வைத்தனர். மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். அதன் முடிவு வரும் பட்சத்தில் மேலும் விவரம் தெரியவரும்” என்று கூறினார்.
இந்த நிலையில் மறுநாளான 19-ம் தேதி மருத்துவ சிகிச்சையிலிருந்து அந்த நான்கு மாணவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு… இனி இது போன்று நேராமல் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.