மக்கள்தொகை அடிப்படையிலான மக்களவை தொகுதிகள் வரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களுடன் டி. ஷார்ட் அணிந்த தி.மு.க எம்.பி.க்களுக்கு சபாநாயகர் ஒ.எம். பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே, “#fairdelimitation. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” எனும் வாசகம் பொறிக்கப்பட்ட டி.ஷர்ட் அணிந்திருந்த திமுக எம்.பி-கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். காலை 11 மணிக்கு அவை தொடங்கியபோது, அதே ஆடையுடன் அவைக்குள் நுழைந்தனர். அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தை பராமரிக்க வேண்டும் என்று கூறும் சபையின் நடைமுறைகளின் விதி 349 ஐ மேற்கோள் காட்டி, டி-சர்ட்களில் உள்ள வாசகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், “தலைவர் யாராக இருந்தாலும் இதுபோன்ற கண்ணியமற்ற உடையை சபைக்குள் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியே சென்று, உடைகளை மாற்றி, சரியான உடையில் வாருங்கள்” என்றார். அதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தி.மு.க எம்.பி. கனிமொழி, “அவைத் தலைவர் டி-சர்ட்டுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தது எங்களின் போராட்டத்துக்கான புதிய முன்னேற்றம். பா.ஜ.க உட்பட பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதற்கு முன்பு கோஷங்கள் எழுதப்பட்ட ஆடைகளை அணிந்திருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை, அவர்களால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்