தொகுதி மறுசீரமைப்பு: ‘பிற மாநில முதல்வர்களை ஒன்றிணைக்கும் ஸ்டாலின்’ – பலன் கிடைக்குமா?

தொகுதி மறுசீரமைப்பு செய்ய பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தசூழலில் கடந்த 25.2.2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் 8 தொகுதிகளை இழக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனி தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும் என்ற சூழல் உருவாகும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். எனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின்

அனைத்துக் கட்சிக் கூட்டம்

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாகக் கூறியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு, விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும். எனவே நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் மக்களிடத்தில் தவறான தகவல்களைத் தெரிவித்து துரோகம் செய்து வருகிறார்” என்றார்.

இதையடுத்து கடந்த 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இதில் கலந்து கொள்ள வேண்டும் எனக்கூறி 63 கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பா.ஜ.க, த.மா.கா, நா.த.க உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. இடதுசாரிகள், காங்கிரஸ், அ.தி.மு.க, வி.சி.க, த.வெ.க, அ.ம.மு.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தொகுதி மறு சீரமைப்பு என்ற கத்தி தமிழ்நாட்டின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள 39 தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

அமித்ஷா

இப்போது உள்ள 543 தொகுதிகள் தொடர்ந்தால், மறுசீரமைப்பின்போது 8 மக்களவை இடங்கள் இழக்க நேரிடும் என்கிறார்கள். அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டால், கூடுதலாக 22 இடங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள்தான் கிடைக்கும். 12 தொகுதிகளை இழக்க நேரிடும். இந்த இரு முறைகளிலும் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து விடும். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும். எனவே இந்தச் சதியை நாம் முறியடிக்க வேண்டும்” என்றார்.

பிறகு கூட்டத்தில், ‘தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது. இந்த வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்றம்!

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், ‘ தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பதற்காக நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்’ என, பல மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். அதன்படி இந்த கடிதம் மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக், பினராயி விஜயன், சித்தராமையா, டி.கே. சிவகுமார், பக்வந்த் மான், சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பலருக்கு கடிதம் அனுபப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க மூத்த தலைவர்கள் கனிமொழி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தயாநிதி மாறன், டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் தலைவர்கள் பலரை நேரில் சந்தித்து கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்.

எனவே நாளை நடக்கும் இந்த கூட்டம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பேசினோம், “முதலில் எந்த அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடக்கிறது என மத்திய அரசு தெளிவாக தெரிவிக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையிலா?, விகிதாசார முறையிலா?, pro-rata அடிப்படையில் செய்யப்போகிறார்களா? என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் இல்லை. ஆனால் pro-rata அடிப்படையில்தான் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

குபேந்திரன்

பிற மாநிலங்களுக்கு கொடுக்கும் அளவுக்கு தொகுதிகளை தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. இதன் மூலம் பா.ஜ.க-வுக்கு நெருக்கடி கொடுக்கிறது, தி.மு.க. மும்மொழி கொள்கை, நிதி ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு என அனைத்திற்கும் திமுக மத்திய அரசை எதிர்த்து போராடுகிறது என்பதை மறுபடி நிரூபித்திருக்கிறார்கள். நிச்சயம் இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel