கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். பாம்பு பிடி வீரரான இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை மீட்க சென்றுள்ளார். அப்போது நாகப்பாம்பு கடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இது அதிர்ச்சியையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது பல்வேறு விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
“பாம்பு பிடி வீரர்களின் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லையா.. மருத்துவ தொழில்நுட்பம் முன்னேறிய நிலையில் சந்தோஷை காப்பாற்ற முடியாதது ஏன்.?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து சந்தோஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசிய போது, “சந்தோஷ்குமார் நாகப்பாம்பை பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது பாம்பு கடித்துள்ளது. பொதுவாக பாம்புகள் தற்காப்புக்காக சில நேரம் விஷத்தை நம் உடலில் இறக்காமல் மேலோட்டமாக கடிக்கும். அப்படி சந்தோஷ் கடந்த காலங்களில் பலமுறை பாம்பு கடி வாங்கியுள்ளார்.
இதையும் அப்படியான கடிதான் என்று நினைத்து அலட்சியமாக இருந்து விட்டார். பாம்பை மீட்டுவிட்டு தன் வீட்டுக்கே வந்துவிட்டார். ஆனால் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே அவரின் உடலில் ஏராளமான மாற்றங்கள் தென்பட்டுள்ளன. இதனால் தன் மனைவியுடன் இணைந்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு விஷமுறிவு ஊசி 10 முறை செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் உடல்நலத்தில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு செல்லும்போதே அவர் சுய நினைவில் இல்லை.
தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சுமார் மூன்று நாள்கள் அவர் சிகிச்சையில் இருந்தார். விஷமுறிவு ஊசி 20 முறை செலுத்தப்பட்டது. மொத்தமாக அவருக்கு 30 முறை விஷமுறிவு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவரின் நுரையீரல் பகுதி பலவீனமாக இருந்துள்ளது. தவிர பாம்பு கடித்து உடனடியாக சிகிச்சை எடுக்காமல் விட்டதால் பாதிப்பு அதிகரித்துவிட்டது. இதனால் தான் சந்தோஷ்குமாரை காப்பாற்ற முடியவில்லை.“ என்றனர்.
இதுகுறித்து வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிராஜூதின் கூறுகையில், “ஆயிரம் பாம்புகளை பிடித்திருந்தாலும் ஒவ்வொரு முறை பாம்பு பிடிக்கும்போது முதல்முறை பிடிப்பது போலதான் அணுக வேண்டும். பொதுவாக நாகம் விஷத்தை மனிதர்களின் உடலுக்குள் செலுத்தாமல் மேலோட்டமாக (Dry bites) கடிக்கும்.

அதை நம்பி கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். விஷம் இல்லாத பாம்பே கடித்தாலும் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் சிகிச்சை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் பதற்றப்படாமல் மன உறுதியுடனும் இருக்க வேண்டும்.
சந்தோஷ் உடனடியாக சிகிச்சை எடுக்காததன் விளைவு அவரின் உயிரை பறித்துவிட்டது. தமிழகம் முழுவதும் ஏராளமான பாம்பு பிடி வீரர்கள் உள்ளனர். அதில் பயிற்சி பெற்றவர்களுக்கு அரசு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். தற்போது பலர் சமூகவலைதளங்களை பார்த்துவிட்டு, விளம்பரத்துக்காக பாம்பு பிடித்து அதை புகைப்படம் எடுத்து பரப்பி வருகிறார்கள்.

இது மிகவும் ஆபத்தானது அங்கீகாரம் அளிப்பதன் மூலம் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே பாம்பு பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகும். சந்தோஷ்குமாரின் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும்.” என்றார்.
காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகையில், “பாம்பு பிடி வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தான் பாம்பை பிடிக்க வேண்டும். கெட்டியான ஆடைகளை அணிய வேண்டும். கையில் கிளவுஸ், காலில் ஷூ அணிந்திருப்பது அவசியம். முக்கியமாக நாகம், கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய 4 பாம்புகள் அதிக விஷத்தன்மையை கொண்டவை.

பெரும்பாலும் இந்த பாம்புகளால் தான் உயிரிழப்புகள் நிகழும். குறிப்பாக நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கும். அதிலும் மதுபோதையில் இருக்கும்போது பாம்புகளை மீட்கும் பணியை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, விஷம் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.” என்றனர்.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks