Ashwin : மேற்கு மாம்பலத்தில் அஷ்வின் பெயரில் சாலை? – சென்னை மாநகராட்சி திட்டம்

இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த அஷ்வினின் பெயரை சென்னையில் ஒரு சாலைக்கு வைப்பதற்கான நடைமுறைகள் சென்னை மாநகராட்சியில் நடந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

IND v NZ – Ravichandran Ashwin

அஷ்வின் இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கு மேல் ஆடிவிட்டார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆட சென்றிருந்த சமயத்தில் அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடிவிட்டார். 700+ சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டார். தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக ஆடிய மிகச்சிறந்த வீரர் என்றும் போற்றப்படுகிறார். சமீபத்தில் மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது. இப்போது, ஐ.பி.எல் இல் சென்னை அணிக்காக ஆடுவதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் அஷ்வின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மேற்கு மாம்பலத்தில் அஷ்வினின் வீடு அமைந்திருக்கும் தெருவுக்கு அஷ்வினின் பெயரை சூட்டுவதற்கான வேலைகள் சென்னை மாநகராட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

அஷ்வின் Carromball Media எனும் நிறுவனத்தை வைத்துள்ளார். அந்த நிறுவனம் சார்பில் ஆர்ய கவுடா தெரு அல்லது ராமகிருஷ்ணாபுரம் 1 வது தெருவுக்கு அஷ்வினின் பெயரை வைக்குமாறு மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கோரிக்கையை ஏற்று தீர்மானமாக நிறைவேற்ற சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருக்கிறது.

Ravichandran Ashwin

விரைவில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.