திருப்பத்தூர் மாவட்டம், ஹவுசிங் ஃபோர்டு அருகே உள்ள தமிழ்நாடு குடியிருப்பு வாரியத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைக் கிடங்கில் டன் கணக்கில் குப்பை கழிவுகளை மலை போல் கொட்டி குவித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விடத்தில் சமூகப் பொறுப்பற்ற சிலர் தொடர்ந்து குப்பைகளை தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படுகிறது. மேலும், அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இது குறித்து நம்மிடம் வந்து பேசிய சமூக ஆர்வலர்கள் , “இவ்விடத்தில் எப்பொழுதும் குப்பைகள் பெருமளவில் குவிந்து காணப்படும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் அனைத்து குப்பைகளையும் நகராட்சி பணியாளர்கள் இங்கே கொட்டி விட்டுச் செல்வார்கள்… நாங்களும் எங்கள் சார்பில் இவ்விடத்தில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை, போதாததற்கு மர்ம நபர்கள் குப்பைகளை அடிக்கடி எரித்து விட்டுச் செல்கின்றனர்.

அப்பகுதி மக்களுக்கு எதாவது நோய்த் தொற்று ஏற்பட்டால் யார் பொறுப்பு ? இவ்வளவு முக்கியம் வாய்ந்த விஷயத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, “பெருமளவில் குப்பைகள் சேர்வதால் நிம்மதியாகச் சாப்பிடக் கூட முடிவதில்லை. மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. தினமும் மூன்று முதல் ஐந்து டிராக்டர் குப்பைகளை இங்கு வந்து கொட்டி விட்டுச் செல்வார்கள். இதனால் அவர்களுக்கு என்ன… பாதிக்கப்படுவது நாங்கள்தான். மறுபக்கம் குப்பைகளை எரிப்பதால் புகை மூட்டம் அடிக்கடி ஏற்படுகிறது.
ஒவ்வொரு முறையும் தீ அணைவதற்கு வெகுநேரம் ஆகிறது. இதனால் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலைமை இப்படியே நீடிப்பதால் ஏதாவது நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் தினமும் இருந்து வருகிறோம். அதிகாரிகள் இதோ கவனிக்கிறோம், உடனே நடவடிக்கை எடுத்து விரைந்து சரி செய்வோம் என்று கூறுவார்கள். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் நிகழாமல் இதே சூழலே நிலவிக் காணப்படுகிறது.

இவ்விடத்தில் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்… இல்லை தீ வைப்பவர்களைக் கண்டறிந்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கச் சென்றிருந்தோம். நகராட்சி அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. ஒருவரை ஒருவர் கைகாட்டி நழுவினர்.
சுகாதாரம் பேணுவதில் அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!