இலைக் கட்சியின் தலைமைக்கும், ‘கோட்டை’ பிரமுகருக்கும் இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், ‘கோட்டை’ பிரமுகரிடம் பேசியிருக்கிறார் சின்ன தலைவி. அப்போது, எடக்கானவர் மீதான தன் அதிருப்தியையெல்லாம் சின்ன தலைவியிடம் கொட்டித் தீர்த்திருக்கிறார் ‘கோட்டை’ பிரமுகர். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட சின்ன தலைவி, ‘எதுவாக இருந்தாலும் அமைதியாகச் செயல்படுங்கள். மீண்டும் ஒரு பிளவு கட்சிக்குள் வந்துவிடக் கூடாது. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். எடக்கானவர் நம் வழிக்கு நிச்சயம் வருவார். அதுவரை பொறுமை அவசியம்’ என அட்வைஸ் மழையை பொழிந்திருக்கிறார்.
ஆனால், எடக்கானவரின் கணக்கோ வேறுவிதத்தில் இருக்கிறது. ‘வலுவான கூட்டணி அமைத்துவிட்டால், எல்லோரின் வாயையும் அடைத்துவிடலாம்… யாரும் தேவையில்லை’ என்று கூட்டணிக்கு மெனக்கெடுகிறாராம் எடக்கானவர்!
கடைக்கோடி கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த மாஜியான ‘ராஜ’ பிரமுகர், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கையோடு, புதிய பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். அதற்காக, கடந்த மாதம் தலைமை வட்டாரத்திலுள்ள அனைவரையும் தேடித் தேடிப் போய் சால்வை போட்டார். சால்வையை வாங்கிக்கொண்ட புள்ளிகளோ, ‘உங்களுக்குத்தான் மாவட்டப் பொறுப்பு காத்திருக்கு…’ என ஏகத்துக்கும் ஏத்திவிட, குஷியில் இருந்தார் ‘ராஜ’ பிரமுகர். ஆனால், அப்படி எந்தப் பதவியும் கிடைப்பதற்கான அறிகுறியே தென்படவில்லையாம். ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதால், ‘வரும் தேர்தலில் சீட் கிடைக்குமா..?’ என்ற சந்தேகமும் ‘ராஜ’ பிரமுகருக்கு எழுந்திருக்கிறதாம். ‘என் அரசியல் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே…’ என்று தன் ஆதரவாளர்களிடம் புலம்பித் தவிக்கிறாராம் ‘ராஜ’ பிரமுகர்!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே நடக்கவேண்டிய தி.மு.க பொதுக்குழு, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது. இந்தச் சூழலில், 23 சார்பு அணிகளிலும் நிரப்பப்படாமல் இருக்கும் அனைத்துப் பொறுப்புகளையும் ஏப்ரல் இறுதிக்குள் முடிக்கச் சொல்லி தலைமையிலிருந்து உத்தரவு பறந்திருக்கிறது. ‘இந்தப் பணிகளை முடித்தால்தான், தள்ளிப்போன பொதுக்குழுவை ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்தநாளுக்கு முன்பாக நடத்த முடியும்’ என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
ஆனால், இளைஞரணியைத் தாண்டி, மற்ற அணிகளில் நிர்வாகிகளை நியமிப்பதில் பெரும் இழுபறி ஏற்பட்டிருக்கிறது. ‘மாவட்ட அணி நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டிருப்பதால், இளைஞரணியைத் தவிர மற்ற அணிகளிலுள்ள பொறுப்புகளை நிரப்புவதில் காலதாமதமாகிறது. இதே நிலை நீடித்தால், கலைஞர் பிறந்தநாளுக்கு முன்பாகப் பொறுப்புகளை நிரப்புவதென்பது முடியாத காரியம்’ எனப் புலம்புகிறார்கள் அறிவாலய நிர்வாகிகள்!
கதர்க் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராக, ‘குமரி’ பிரமுகரை நியமித்தது டெல்லித் தலைமை. ஆனாலும், மொத்த அதிகாரத்தையும் தன் கையில் வைத்துக்கொண்டு, ‘குமரி’ பிரமுகரைச் செயல்படவிடாமல் முடக்குகிறாராம் ‘செல்வ’ பிரமுகர். சமீபத்தில், சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட முக்கியமான தீர்மானத்தில்கூட, ‘குமரி’ பிரமுகர் பேசுவதற்கு அனுமதிக்கவில்லையாம் ‘செல்வ’ பிரமுகர். ‘மக்கள் பிரச்னைகளை அவரும் பேச மாட்டேன் என்கிறார். என்னையும் பேசவிட மறுக்கிறார். ஆளும் தரப்புக்கு ஆதரவாக லாபி செய்வதிலேயே குறியாக இருந்தால், கட்சியை எப்படி முன்னேற்றுவது’ என வெடித்துப் புலம்பியிருக்கிறார் ‘குமரி’ பிரமுகர்.
அவரது வருத்தத்தை உணர்ந்த சீனியர்கள் சிலர், ‘இப்படியே இருந்தால் நீங்கள் டம்மியாகிவிடுவீர்கள். எதிர்த்து பேசுங்கள்…’ என ஏத்திவிட்டிருக்கிறார்கள். சீனியர்களின் சப்போர்ட் கிடைத்திருப்பதாக நம்புவதால், ` ‘குமரி’ பிரமுகர் இனி இறங்கி அடிப்பார்’ என்கின்றன கதர் வட்டாரங்கள்!
ஃபயர் துறையில், உயர் பொறுப்பிலிருக்கும் சீனியர் அதிகாரி விரைவிலேயே ஓய்வுபெறவிருக்கிறார். அதனால், துறையிலுள்ள அனைத்து டீலிங்குகளையும் அவசர அவசரமாக முடித்துவருகிறாராம். குறிப்பாக, பெண்டிங்கிலுள்ள வசூல் ஃபைல்களை க்ளியர் செய்து, அதன் மூலமாக பல ஸ்வீட் பாக்ஸுகளை வாங்கி அடுக்கியிருக்கிறாராம். மேலும், அந்த ஸ்வீட் பாக்ஸுகளை, முக்கியமான சில நிறுவனங்கள் மூலமாக முதலீடு செய்யவும் திட்டமிடுகிறாராம். ஓய்வுபெற்றதும் வெளிநாட்டு ட்ரிப் செல்வதற்கு, இப்போதே விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து காத்துக்கொண்டிருக்கிறாராம் அந்த சீனியர் அதிகாரி. அவரை ‘ஆ…’ என வாய்பிளந்து பார்க்கிறார்கள் சக துறை அதிகாரிகள்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
