எமனாக மாறிய நாகப்பாம்பு; பிரபல பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு – என்ன நடந்தது?

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 39). பாம்பு பிடி வீரரான இவர் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிகளில் விடும் பணியைச் செய்து வருகிறார். அதன்படி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டம் முழுவதும் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம், கட்டுவிரியன், நாகப்பாம்பு, கொம்பேரி மூக்கன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார்.

கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குமார்

பாம்புகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பணிகளையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 17-ம் தேதி தொண்டாமுத்தூர் அருகே குடியிருப்புப் பகுதியில் நாகப்பாம்பு வந்திருப்பதாக  சந்தோஷ்குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் சந்தோஷ் சம்பவ இடத்துக்கு சென்று பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த நாகப்பாம்பு எதிர்பாராத விதமாக சந்தோஷைக் கடித்துள்ளது.

நாகம்பாம்பு

இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இழப்பு குடும்பத்தினர் பாம்பு பிடி வீரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சந்தோஷின் உறவினர்கள் கூறுகையில், “உயிரிழந்த சந்தோஷ்குமாருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி.

உயிரிழப்பு

சந்தோஷ்குமாரின் ஒரே வருமானத்தில் தான் குடும்பம் இயங்கி வந்துள்ளது. அவர் எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என்று நம்பிக்கையாக இருந்தோம். நேற்று அவர் கண் திறந்தும் பார்த்தார். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அரசு அவரின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும்.” என்றனர்.