Vaiko: “தமிழ்நாடு மீனவர்கள் அனாதையா?” – மாநிலங்களவையில் கொந்தளித்த வைகோ!

பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதுடன், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 42 மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதைத் தடுக்க கோரி மாநில அரசு, மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

வைகோ

இதையடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலைத் தடுக்க கோரியும், இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசைக் கண்டித்துப் பேசிய மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, “இலங்கையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்திய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து வரி கட்டுகிறோம். தமிழ்நாடு மீனவர்களைக் காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

மீனவர்கள் கைதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான மீனவ மகளிர் ராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைகோ

40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மீனவர்களை பாதுகாக்க இந்திய கடற்படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர் பிரச்னையில் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றி வருகிறது.

இலங்கை மீனவர்களுக்கு இலங்கை அரசு பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால், நம் நாட்டு மீனவர்களுக்கு நம் நாடு பாதுகாப்பு வழங்கவில்லை. தமிழ்நாடு மீனவர்கள் அனாதைகள் போல தவிக்கிறார்கள்” என்று கொந்தளிப்புடன் தமிழ்நாட்டு மீனவர்களுக்காகக் குரல் கொடுத்துப் பேசியிருக்கிறர் வைகோ.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆளுநர் வந்தும் தீர்வு கிடைக்கவில்லை… திருவோடு ஏந்திய மீனவர்கள்; 4-வது நாளாகத் தொடரும் போராட்டம்

இதற்குப் பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மத்திய அரசு தமிழ்நாடு மீனவர்களின் நலன், பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை காக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மீனவர்களின் பிரச்னைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண முயற்சித்து வருகிறது” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel