பல்லடம் மூவர் கொலை வழக்கு: அரசியல் அழுத்தம்; 100 நாள்களை கடந்து சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட பின்னணி?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயதான தெய்வசிகாமணி, அவரது மனைவியான 74 வயது அலமாத்தாள், 44 வயதான மகன் செந்தில்குமார் ஆகிய மூவரின் தலையும் அடித்து நொறுக்கப்பட்டு கடந்த நவம்பர் 28-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அலமாத்தாள் அணிந்திருந்த ஆறு பவுன் நகை மற்றும் செந்தில்குமாரின் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொலைகள் தொடர்பாக பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

கொலை

கொலை நிகழ்ந்த தெய்வசிகாமணியின் வீடு, அவரது தோட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி என சல்லடைபோட்டு போலீஸார் தேடியும் கொலை தொடர்பான சிறு தடயம் கூட போலீஸாருக்கு கிடைக்காதது வழக்கில் பின்னடைவை ஏற்படுத்தியது. அத்துடன் தெய்வசிகாமணியின் வீடு சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் இருந்ததும், அங்கு சிசிடிவி இல்லாததால் சரியான துப்பு கிடைக்காமல் போலீஸார் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, தனிப்படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் பெட்ரோல் பங்க், மருத்துவமனை, ஜூவல்லரி, பேக்கரி ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளைக் கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே, இந்தக் கொலையை ஒப்புக்கொள்ளுமாறு போலீஸார் அடித்து சித்ரவதைபடுத்துவதாக தெய்வசிகாமணி தோட்டத்தில் வேலை பார்த்த பட்டில் சமூகத்தைச் சேர்ந்த பால்ராஜ் கடந்த டிசம்பர் மாதம் உடல் முழுவதும் லத்தியால் அடித்த காயங்களுடன் திருப்பூர் ஆட்சியரிடம் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பழவஞ்சிபாளையத்தில் வசிக்கும் மற்றொரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, அடித்து துன்புறுத்தி கொலையை ஒப்புக் கொள்ளுமாறு போலீஸார் மிரட்டியதாக அவர்களும் ஆட்சியர்களிடம் புகார் அளித்தனர்.

கொலையாளிகளை விடுத்து பட்டியல் சமூகத்தினரை இந்தக் கொலையில் சிக்க வைக்க முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி மற்றும் இயக்கங்கள் குற்றஞ்சாட்டியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டன. அதே நேரத்தில் பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அரசியல் தளத்தில் இருந்து வரும் அழுத்தம், கொலை நிகழ்ந்து 100 நாள்களைக் கடந்தும் குற்றவாளிகள் குறித்து துப்பு துலங்காதது திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு பெரும் தலைவலியாக மாறியது.

சிபிசிஐடி-க்கு மாற்றம்

இது குறித்து திருப்பூர் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். கொலை நிகழ்ந்த ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம் என நினைத்தோம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான 4 மாதங்களாக கொலை நிகழ்ந்த இடம் தொடங்கி 5 கி.மீட்டர் சுற்றளவுக்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சல்லடையாக ஆய்வு செய்தும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. முன்னாள் குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதன் தொடர்ச்சியாகம் 2020- தொடங்கி 2023 வரை ஈரோடு மாவட்டம் அரச்சலூர், சென்னிமலை மற்றும் காங்கேயத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த 5 முதியவர்கள் இதே பாணியில்தான் கொலை செய்யப்பட்டனர். அந்த சந்தேகத்தின் அடிப்படையில், அந்த வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தப்பட்டது. அதிலும், இந்த வழக்கில் துப்புத்துலங்கவில்லை. தனிப்படைகள் அமைக்கப்படிருந்தாலும், அதில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வழக்கமான சட்டம்-ஒழுங்கு பிரச்னை, நீதிமன்ற வழக்கு ஆகியவற்றுக்கு மத்தியில்தான் இந்த வழக்கையும் கவனித்து வந்தனர்.

முன்னதாக, கொலையாளிகளை விரைந்து பிடிக்ககோரி, பாஜக சார்பில் அவிநாசிபாளையத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென அண்ணாமலை கோரிக்கை வைத்திருந்தார். அத்துடன், இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க கோரி, கொலையானவர்களின் உறவினர்கள் மற்றும் அவிநாசிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேரிடம் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை மனுவை கொலையான செந்தில்குமார் மனைவியை அழைத்துக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்திக்க அண்ணாமலை திட்டமிருந்தார். குற்றாவாளிகைப் பிடிக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குவதுடன், அரசியல்ரீதியில் தமிழக அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது.

ரௌடி கொலை

இதை அறிந்துகொண்ட காவல் துறை, எந்த முன்னேற்றமும் இல்லாதபோது, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரீஷ் யாதவ் மூலம் கடந்த வாரம் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “மூவர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். 8 சிறப்பு குழுக்கள் இந்த வழக்கை கண்டுபிடிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை அடையாளம் காணவும், கைது செய்யவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே, மூவர் கொலையில் தமிழக காவல் துறை திறம்பட செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார் என்கின்றனர் விவரம் அறிந்த காவல் துறை அதிகாரிகள்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel