பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், மாமன்றக் கூட்டரங்கில் மேயர் பிரியா தலைமையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகள்!
1. 2025-26 நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகர மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ. 3 கோடியிலிருந்து ரூ. 4 கோடியாக உயர்த்துவதற்கு அரசுக்கு முன்மொழிவு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
2. 2025-26 நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகர மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 60 லட்சமாக உயர்த்தப்படும்.

3. சென்னை மாநகராட்சியின் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும்.
4. பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் வழங்குவதற்கு வாட்ஸ்அப் அடிப்படையிலான தகவல் தொடர்புகளை உருவாக்கிட, ரூ. 4.46 கோடி நிதி ஒதுக்கப்படும்.
5. பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும், 52 சென்னை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 4.70 கோடி மதிப்பீட்டில் ஜெனரேட்டர்கள் அமைக்கப்படும்.
6. சென்னை பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளவும், MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் வரும் கல்வியாண்டில் பயிற்சியளிக்க ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
7. சென்னை நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள், தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை பங்கேற்பவர்களுக்கு தலா ரூ. 2,500 மதிப்பிலான தரமான ஸ்போர்ட்ஸ் ஷூ வழங்க ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு.

8. மகளிர் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சிகளான தையல் பயிற்சி எம்ராய்டரி, ஆரி வேலைப்பாடுகள், மற்றும் கணினி பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கிட ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மையம் அமைத்திட மண்டலம் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் வீதம் 15 மண்டலங்களுக்கு ரூ 7.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
9. வடசென்னை பகுதி வாழ் இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், மண்டல் 2, வார்டு 16-ல் ஆண்டார் குப்பம் – ஏலந்தனூர், சடையன் குப்பம் பர்மா நகர் ஆகிய இரண்டு இடங்களில் இுப் பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.
10. 150 விளையாட்டுத் திடல்களில் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த 171 விளையாட்டுத் திடல்களில் ரூ. 5 கோடி நிதியில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பாதுகாவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
11. ரூ. 30 கோடியில் 200 புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படும்.
12. மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு இடங்களில் ஃபுட் கோர்ட் எனும் உணவு விற்பனை மண்டலங்கள் இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.

13. மருத்துவ உபகரணங்கள், ஊட்டச்சத்து பெட்டகங்கள் சேமிக்க மண்டலம் 6 அம்பாள் நகரில் இரண்டு அடுக்கு கட்டடம் கட்ட ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.
14. வடசென்னை மூலக்கொத்தளம் மயான பூமியில், இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

15. 10 மண்டலங்களில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில், ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக வளர்ப்பு பிராணிகளுக்கான மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்.
16. தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் ரூ. 3 கோடி செலவில் 1.80 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும்.
17. பெருநகர சென்னை மாநகராட்சியின் 69 நடுநிலைப் பள்ளிகளில் மாதம் ரூ. 15,000-க்கும், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதம் ரூ. 18,000-க்கும் மொத்தம் 141 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கென ரூ. 2.34 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
18. மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்களின் கீழ் பகுதியினை அழகுபடுத்திட ரூ. 42 கோடி ஒதுக்கப்படும்.

19. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 18 இடங்களில் உள்ள வாகனப் போக்குவரத்து சுரங்கப்பாதைகளில் மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்கு புதிய டீசல் மோட்டார்கள், மின்மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் அமைக்கவும், சுரங்கப்பாதைகளில் வரைபடங்கள் வரைந்து மின்விளக்குகளால் அழகுபடுத்தவும் ரூ. 14.40 கோடி ஒதுக்கப்படும்.

20. குப்பை கொட்டும் வளாகத்தில் நெகிழிகளைக் கொட்டுவதைத் தவிர்க்க ஏற்கெனவே 5 மண்டலங்களில் தலா 10 மெட்ரிக் டன் திறனுடன் இயங்கிவரும் நெகிழி சிப்பமாக்கல் மையங்களுடன், கூடுதலாக 10 மண்டலங்களில் (1, 3, 4, 8, 9, 10, 11, 12, 13, 15) தலா 10 மெட்ரிக் டன் திறன் கொண்ட நெகிழி சிப்பமாக்கல் மையங்கள் ரூ. 22.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
21. பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில், சுய உதவிக் குழுக்களால் உணவு மையங்கள் அமைக்கப்படும்.