“நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேனா..?” – கனிமொழி உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு பவன் கல்யாண் விளக்கம்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்றம் முதல் அரசியல் கட்சிகளின் மேடை வரை பா.ஜ.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் இடையே பெரும் வார்த்தைப் போர் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், ஆந்திராவில் ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு தொடக்க விழாவில் உரையாற்றிய அக்கட்சியின் நிறுவனரும், மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண், “தமிழ்நாடு தொடர்ந்து இந்தியை நிராகரிக்கிறது. அவர்களுக்கு இந்தி மொழி தேவையில்லை எனக் கூறுகிறார்கள். அப்படியென்றால், ஏன் தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? பீகாரிலிருந்து தொழிலாளர்களையும் நம்பியிருக்கிறார்கள். இப்படியான விஷயங்கள் இருந்தும் இந்தியை வெறுக்கிறோம் எனக் கூறுகிறார்கள். இது எப்படி நியாயமானதாக இருக்கும்” என்றார். மேலும், “இந்தியாவுக்கு இரண்டு மொழியல்ல, தமிழ் உட்பட பல மொழிகள் தேவை.” என்று மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பேசினார்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

பவன் கல்யாணின் இத்தகைய பேச்சு பல தரப்பிலும் விவாதத்தைக் கிளப்பியது. இதில், நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில், “உங்களின் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று கூறுவது பிற மொழியை வெறுப்பதாகாது. அது, தாய்மொழியைப் பாதுகாப்பதாகும். இதை யாரவது பவன் கல்யாணிடம் கூறுங்கள்” என்று பதிவிட்டார்.

அதேபோல், திமுக எம்.பி கனிமொழி எக்ஸ் தளத்தில், பாஜக-வுடன் கூட்டணி வைப்பதற்கு முன், கூட்டணி வைத்ததற்குப் பின் என பவன் கல்யாணின் ட்வீட், பேச்சு குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது” என்று ட்வீட் செய்தார். கனிமொழி பகிர்ந்த புகைப்படங்களில் ஒன்றில், பவன் கல்யான் தனது 2017-ம் ஆண்டு ட்வீட்டில் “வட இந்திய தலைவர்கள் நம் நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு `கோ பேக் இந்தி’ என்ற செய்திக் கட்டுரையைப் பகிர்ந்திருந்தார். இதனால், பவன் கல்யாண் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டதாக பேச்சுக்கள் எழுந்தன.

இந்த நிலையில், தன் மீதான இத்தகைய விமர்சனங்களுக்கு பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில், “ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பது அல்லது ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பது இரண்டும் நமது பாரதத்தின் தேசிய மற்றும் கலாசார ஒருங்கிணைப்புக்கான நோக்கத்தை அடைய உதவாது. இந்தியை ஒரு மொழியாக நான் எதிர்த்ததில்லை. அதைக் கட்டாயமாக்குவதை மட்டுமே நான் எதிர்த்தேன். தேசிய கல்விக் கொள்கை இந்தியைக் கொண்டுவராத சூழலில், திணிப்பு பற்றி தவறான கதைகளைப் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

தேசிய கல்விக் கொள்கையின்படி, வெளிநாட்டு மொழியுடன் இரண்டு இந்திய மொழிகளை கற்றுக்கொள்வதற்கான வசதியை மாணவர்கள் பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு இந்தி படிக்க விரும்பவில்லை என்றால், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அசாமிஸ், காஷ்மீரி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மெய்தி, நேபாளி, சந்தாலி, உருது அல்லது வேறு எந்த இந்திய மொழியையும் தேர்வு செய்யலாம்.

பல மொழிக் கொள்கையானது மாணவர்களுக்கு விருப்பத்தை அளிக்கவும், தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும், இந்தியாவின் வளமான மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க, அரசியல் அஜெண்டாவுக்காக இந்தக் கொள்கையை தவறாகப் புரிந்துகொண்டு பவன் கல்யாண் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகக் கூறுவது புரிதல் இல்லாததையே பிரதிபலிக்கிறது. ஜன சேனா கட்சி ஒவ்வொரு இந்தியனுக்கும் மொழி சுதந்திரம் மற்றும் கல்வித் தேர்வு என்ற கொள்கையில் உறுதியாக நிற்கிறது.” என்று விளக்கமளித்திருக்கிறார்.