ஒருவரை ஒருவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆணை…
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் பொறுப்பு துணை வேந்தர் சங்கர். பதிவாளர் தியாகராஜன். இருவருக்குமிடையே நடந்து வந்த ஈகோ யுத்தம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவரை ஒருவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆணை பிறபித்தது தமிழ் பல்கலைகழக வட்டாரத்தில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம், கடந்த 2017-2018ல் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு 40 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

பணி நியமனத்தில் சர்ச்சை
இதில் தகுதி இல்லாதவர்களையும் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டதாக அப்போது பணியிலிருந்த துணைவேந்தர் பாஸ்கரன் மீது சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றும் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு துணை வேந்தராக திருவள்ளுவன் பொறுப்பேற்றார். இவரிடம் பணி நியமனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் தரப்பில் சொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவர் அந்த 40 பேரையும் தகுதி கான் பருவம் அடிப்படையில் நிரந்தர பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக கூறப்பட்டது. இதையடுத்து இதற்கு ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
ஆனால், திருவள்ளுவன் ஆளுநருக்கு முறையாக விளக்கத்தை அளிக்கவில்லை என்கிறார்கள். இதனால் கடந்த அக்டோபர் 20-ம் தேதி திருவள்ளுவனை சஸ்பெண்ட் செய்துதுடன், ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் ஆளுநர் உத்தரவிட்டார். திருவள்ளுவன் ஓய்வு பெற இருந்த சமயத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அப்செட் ஆனவர் அப்போதே பல்கலைகழகத்திலிருந்து கிளம்பி விட்டார்.

இதையடுத்து, தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கர் துணை வேந்தவராக (பொறுப்பு) ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டார். சங்கர் பொறுப்பேற்ற உடனே, அவர் முறையாக செயல்படுவதில்லை என புகார் கிளம்பியது. இதனால் பலகலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக தனி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. சென்னையில் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில், நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு சில பேராசிரியர்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை.
அதே நேரத்தில் தியாகராஜன், பலருக்கு அழைப்பு கொடுத்தாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஆய்வு கூட்டத்தில் தமிழ்ப் பல்கலைகழகத்தில் நிலவும் குறைகள் குறித்து பலரும் பேசியுள்ளனர். இந்த நிலையில் சங்கர், பேராசிரியர், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையை உருவாக்கி வருவதால், பல்கலைகழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு துணை வேந்தர் சங்கரை பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாக, பல்கலைகழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதியை துணை வேந்தராக (பொ) நியமிப்பதாக ஆணை ஒன்றை தியாகராஜன் வெளியிட்டார்.

இதற்கிடையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தால், தற்போது பொறுப்பு பதிவாளராக பணியாற்றும் தியாகராஜன், விசாரணை வரம்பிற்கு உட்பட்டு இருப்பதாலும், நிர்வாகக் காரணங்களுக்காகவும் தியாகராஜனை பதிவாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதுடன் அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் வெற்றிச்செல்வனை பதிவாளராக, மறு ஆணை பிறப்பிக்கும் வரை அல்லது நிரந்தரப் பதிவாளர் பணிநியமனம் செய்யப்படும் வரை பணியாற்றுவதற்கான ஆணையை சங்கர் பிறப்பித்தார். பதிவாளரும், துணை வேந்தரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பொறுப்பிலிருந்து நீக்குவதாக ஆணை பிறப்பித்து கொண்டது கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்த தகவல் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர் கவனத்திற்கு சென்ற நிலையில், பல்கலைகழகத்தில், பழைய நிலையே தொடர வேண்டும், இரண்டு ஆணைகளையும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது என்றனர்.