நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது சென்னை புத்தகக் காட்சியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (27.12.2024) தொடங்கி வைத்தார். உடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திண்டுக்கல் லியோனி, மனுஷ்யபுத்திரன் மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து புத்தகக் காட்சி நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர், மகாத்மா காந்தி மற்றும் வ.உ சிதம்பரனார் ஆகியோரின் சிலைகளையும் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.




முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணமடைந்ததால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் ம. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டது.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) நடத்தும் இந்த புத்தகக் காட்சி இன்று தொடங்கி ஜனவரி 12 வரை நடைபெற உள்ளது. பெரியவர் தெடங்கி சிறுவர் வரை என எல்லோரும் வாசிக்கும் வகையில் ஏராளமான தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
900 அரங்குகள் கொண்ட இந்த புத்தகக் காட்சி விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.






அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்குபெறும் இலக்கிய கூட்டங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், பட்டிமன்றங்கள், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளும் நடைபெற உள்ளது.