த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் இறப்புச் செய்தியை கேட்டு ஆழ்ந்த சோகமடைந்தேன்.
தேர்ந்த ஞானத்தோடு இந்தியாவை வழிநடத்திச் சென்றார். குறைவாக பேசி நிறைய விஷயங்களை செய்து காட்டினார். இந்திய பொருளாதாரத்திற்கு மற்ற மதிப்புமிகு துறைகளுக்கும் தடங்கலின்றி அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்பு எப்போதும் போற்றப்படும். இந்த கடினமான நேரத்தில் அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் காந்தி இரங்கல்
மன்மோகன் சிங் அவர்கள் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும், நேர்மையுடனும் வழிநடத்தினார். பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் நம் தேசத்தை ஊக்கப்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ஒரு வழிகாட்டி மற்றும் ஆலோசகரை நான் இழந்துவிட்டேன். அவரால் ஈர்க்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களான நாம், அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வோம்.”
– ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர்

‘தென்னக மக்களின் குரலுக்கு மதிப்புக் கொடுத்த தலைவர்!’ – முதல்வர் ஸ்டாலின் மன்மோகன் சிங்குக்கு புகழாரம்!
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது.
தலைவர் கலைஞர் அவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்தார்.
நெருக்கடியான காலங்களிலும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் உறுதியாக ஒன்றிணைந்து நின்று, நம்பிக்கை மற்றும் மாநில அடையாளங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தினர். அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப்பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார்.
பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார். இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும்.
– முதல்வர் ஸ்டாலின்
‘கட்சி பேதமின்றி…’ – நட்டா இரங்கல்
“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருடைய தொலைநோக்கு பார்வை இந்தியாவின் அரசியலிலும் பொது வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கட்சி பேதமின்றி அனைவராலும் மதிக்கப்பட்டவர் மன்மோகன் சிங் அவருடைய லகசி இந்தியாவை மேம்படுத்துவதில் ஈடுபடுத்தப்படும்” என பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இரங்கல்
பிரியங்கா காந்தி இரங்கல்
“மன்மோகன் சிங்
அவரது நேர்மை எப்போதும் எங்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும், மேலும் இந்த நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் மத்தியில் அவர் என்றென்றும் தலைநிமிர்ந்து நிற்பார், அவர் தனது எதிரிகளால் நியாயமற்ற மற்றும் ஆழமான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு ஆளான போதிலும் தேசத்திற்கு சேவை செய்வதில் உறுதியுடன் இருந்தார்.
அவர் இறுதி வரை உண்மையான சமத்துவவாதி, புத்திசாலி, வலிமையான மற்றும் தைரியமானவராக இருந்தார். அரசியலின் கரடுமுரடான உலகில் தனித்துவமான கண்ணியம் மற்றும் மென்மையான மனிதர் அவர் ” – காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர், பிரியங்கா காந்தி
பிரதமர் மோடி இரங்கல்
“இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான தோற்றத்தில் இருந்து உயர்ந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். அவர் நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றினார், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பாராளுமன்றத்தில் அவர் செய்த தலையீடுகளும் புத்திசாலித்தனமாக இருக்கும். நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்” – பிரதமர் மோடி இரங்கல்
Dr. Manmohan Singh Ji and I interacted regularly when he was PM and I was the CM of Gujarat. We would have extensive deliberations on various subjects relating to governance. His wisdom and humility were always visible.
In this hour of grief, my thoughts are with the family of… pic.twitter.com/kAOlbtyGVs
— Narendra Modi (@narendramodi) December 26, 2024
இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 92 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

மன்மோகன் சிங் இந்தியாவின் முன்னாள் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார். அதேமாதிரி, 90 களில் நிதியமைச்சராக உலகமயமாக்கலுக்கு பிறகு இந்தியாவின் முக்கிய பட்ஜெட்களையும் தாக்கல் செய்திருக்கிறார்.
1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி பஞ்சாபில் பிறந்தவர் மன்மோகன் சிங். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1954 -ல் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார். பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் வணிகவியல் சார்ந்து மேலும் படித்தார். பஞ்சாப் யூனிவர்சிட்டியிலும் டெல்லி ஸ்கூப் ஆப் காமர்ஸிலும் ஆசிரியராக பணியாற்றிய மன்மோகன் சிங், வணிகவியலில் கொண்டிருந்த மேதமை காரணமாக அரசின் வணிகவியல் துறைக்கு ஆலோசகராக 1970 -களில் நியமிக்கப்பட்டார்.
1991 முதல் ராஜ்ய சபா உறுப்பினராக மன்மோகன் சிங் பணியாற்றி வந்தார். நிதியமைச்சராக இருந்தவர் 1998 – 2004 காலக்கட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். அதன்பிறகுதான், 2004-2009, 2009-2014 என இரண்டு முறை பிரதமராகவும் இருந்தார்.

92 வயதாகும் மன்மோகன் சிங் சில மணி நேரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அங்கே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. மன்மோகன் சிங்கின் இறப்பை காங்கிரஸ் எய்ம்ஸ் மருத்துவமனையும் உறுதி செய்திருக்கிறது.