கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. எதிர்பாராத இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் மாணவிகள் கல்லூரி கமிட்டியிடம் தாமாக முன்வந்து புகாரளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி 2 நாள்கள் கழித்து புகார் அளித்திருந்தாலும் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த ஒரு மாணவியும் பாதிக்கப்படக் கூடாது என்று முதல்வர் உறுதியாக இருக்கிறார். தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும்.

இதை அரசியலாக்கி ஆதாயம் தேட வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் பெண்களுக்குரிய பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கமிட்டியிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பார்கள், புகார் கொடுக்காமல் இருந்தாலும் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் மாணவர்களை கண்காணித்து வருவார்கள்.
மாணவர்களின் நடவடிக்கையில் ஏதேனும் ஐயம் கொண்டால், நீங்களே அவர்களிடம் பேசுங்கள் என்று அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுங்கள் என்பதையெல்லாம் அந்தக் குழுவிற்கு வலியுறுத்தியிருக்கிறோம். பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த இடம் சிசிடிவி-க்கு உட்படாத முட்புதர் நிறைந்த பகுதி.

அந்த முட்புதர்களை அகற்றி இரவு நேரத்தில் விளக்கு அமைத்து போதிய வெளிச்சம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் முட்புதர்களை அகற்றும் பணியும், அனைத்து இடங்களிலும் மின் விளக்கு பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.