சமீபத்தில் சென்னை, அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தி.மு.க-வை சேர்ந்தவர் என பா.ஜ.க குற்றம்சாட்டுகிறது. மறுப்பக்கம் இதை தி.மு.க முற்றிலுமாக மறுத்து வருகிறது. தி.மு.கவை கண்டித்து பா.ஜ.க தலைவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தசூழலில்தான் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்’ என்பதற்காக தன்னை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை நடத்துவதாகக் கூறியிருந்தார். அதன்படி கோவையில் உள்ள அவரின் வீட்டுக்கு முன்னே நின்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார், அண்ணாமலை. அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த பா.ஜ.க தொண்டர்கள் தி.மு.கவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இந்த போராட்டம் வருங்காலத்தில் மிகவும் தீவிரமாகும். இந்த போராட்டம் தனி மனிதனை சார்ந்தோ, தனிமனித ஆட்சியாளர்கள் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்துவதற்கோ நடத்தவில்லை. அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. கல்வியின் தரம் சரியத் தொடங்கியுள்ளது. பொருளாதாரம் பின்தங்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்களின் மீது தொடுக்கப்படும் குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எனவேதான் தவவேள்வியாக இன்று இந்த போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம். 48 நாட்கள் விரதம் இருக்கவுள்ளேன். மூன்று ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் தமிழகத்தை எவ்வளவு பின்னால் கொண்டு போய் இருக்கின்றார்கள் என்பதையும் தொடர்ந்து பேசுவோம்.

நான் காவல்துறையில் பணியாற்றியபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் பணியாற்றினேன். அப்போது இறந்த பெண்ணின் தாய் என்னிடம், “குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டீர்கள். என் பெண்ணை திருப்பிக் கொடுங்கள்” என்றார். அது எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றும் அப்படியான ஒரு சம்பவம் நடக்கிறது. எனவேதான் சாதாரண அரசியல்வாதி போன்று அதை பேசிவிட்டு கடந்து செல்ல இயலவில்லை. அதனால்தான் நன்றாக யோசித்து இத்தகைய முடிவை எடுத்தேன். தி.மு.க-வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணிகளை அணியப்போவதில்லை. இது ஒரு தவமாக தமிழக மக்களுக்காக செய்கின்றோம்.
எனக்கு நானே கொடுத்துக் கொண்ட சாட்டை அடி என்று சொல்வதைக் காட்டிலும் சமுதாயத்தில் ஏற்படும் அவலங்களுக்கான சாட்டை அடி இது என்றுதான் கூற வேண்டும். இந்த ஆட்சி முடிய வேண்டும். தி.மு.க நிறைய தவறு செய்கின்றது. தமிழ் மண்ணின் மரபு இது என்பதால் நான் சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் இறங்கியுள்ளேன். இதை நகைச்சுவையாக பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கட்டும். சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளட்டும். லண்டன் பயணத்திற்கு பிறகு என்னுடைய பாதை இன்னும் தெளிவாகியுள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பதற்கான உறுதித் தன்மை அதிகரித்துள்ளது. அங்கே படித்துவிட்டு திரும்பிய பிறகு, அரசியலை தூரமாக நின்று பார்க்கும்போது நிறைய புரிதல் உள்ளதாக நினைக்கிறேன்” என்றார்.

அண்ணாமலையின் இந்த போராட்டம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதுகுறித்து வி.சி.க தலைவர் திருமாவளவன், “விரதம் இருப்பது, காலணிகளை அணியாமல் இருப்பது, சாட்டையால் அடித்துக் கொள்வது போன்ற போராட்டங்கள் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளன. அண்ணாமலையின் இந்த போராட்டங்கள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக் கூடாது” என தெரிவித்திருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், “ஆன்மீகத்தில்தான் இதுபோல் உடலை வருத்திக்கொள்ளும் செயல்களில் பக்தர்கள் ஈடுபடுவார்கள். இத்தனை ஆண்டுகால தமிழக அரசியலில் இப்படி நடப்பது இதுதான் முதல்முறை. அண்ணாமலையின் இத்தகைய செயலை அரசியல் அபத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோல் சாட்டையால் அடித்துக்கொள்வது, விரதம் இருப்பது, காலணிகளை அணியாமல் இருப்பதால் தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு வங்கி உயராது. தன் பக்கம் மீடியா வெளிச்சத்தை திருப்புவதற்குத்தான் அண்ணாமலை இப்படி செய்கிறார்.
அதேநேரம் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவதற்கும், எப்ஐஆர் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்வதற்கும் எதிர்க்கட்சியாக அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதுபோன்ற அபத்தமான அரசியலை செய்ய கூடாது” என்றார்.
அண்ணாமலை தரப்பினரோ, “முதலில் எதற்காக போராட்டம் என்று பார்க்க வேண்டும். காவல்துறையின் அலட்சியத்தால் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களோடு முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்கும் போது அது ஏற்படுத்தும் தாக்கத்தை மக்களிடம் எடுத்து சொல்வது எதிர்க்கட்சிகளின் வேலை. அதை தான் செய்திருக்கிறார். மற்றப்படி பாதிக்கப்பட்டவர்களின் இந்த வலி புரியும். நகைப்பவர்கள் நகைக்கட்டும் என தலைவர் அண்ணாமலையே சொல்லிவிட்டார்” என்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் உங்கள் கருத்தென்ன… கமென்டில் சொல்லுங்கள்..!