Sriram Krishnan: SRM மாணவர், யூடியூபர், மஸ்கின் நண்பர்… ட்ரம்பின் ஆலோசகர் – யாரிந்த ஶ்ரீராம்?

எலான் மஸ்கின் நம்பிக்கைக்குரிய ஶ்ரீராம் கிருஷ்ணன்

அமெரிக்காவில் ஆட்சி அமைக்கவிருக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய-அமெரிக்கரான ஶ்ரீராம் கிருஷ்ணனை வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அலுவலகத்தின், மூத்த ஏஐ கொள்கை ஆலோசகராக முன்மொழிந்துள்ளார்.

ஶ்ரீராம், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், யாகூ, ஃபேஸ்புக், ஸ்நாப் போன்ற மிகப் பெரிய தொழில்நுட்ப தளங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு துணிகரமான தொழிலதிபர் என்கின்றனர்.

ட்ரம்ப்பின் தொழில்நுட்பக் குழுவில் டேவிட் ஓ சாக்ஸ் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார். டேவிட் ஓ சாக்ஸ் வெள்ளை மாளிகை AI & Crypto Czar ஆக பொறுப்பேற்கவுள்ளார். ( AI & Crypto Czar என்பது ட்ரம்ப் உருவாக்கியிருக்கும் புதிய பொறுப்பாகும்).

இவர்கள் குறித்து டொனால்ட் ட்ரம்ப், “டேவிட் சாக்ஸ் மற்றும் ஶ்ரீராம் உடன் நெருங்கி பணியாற்றுவது, ஏஐ-யில் அமெரிக்கா தலைமைதாங்குவதையும், அரசில் ஏஐ கொள்கைகளை வகுக்கவும் செயல்படுத்தவும் உதவும்.” என தெரிவித்துள்ளார்.

trump

டேவிட் சாக்ஸுடன் இணைந்து அமெரிக்கா ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிப்பதை உறுதிசெய்வதில் பெருமைபடுவதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஶ்ரீராம்.

ஶ்ரீராம் கிருஷ்ணன் (Sriram Krishnan) எலான் மஸ்கின் நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்படுகிறார். ட்ரம்ப்புக்காக தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டதால் அரசியல் களத்தில் அதிகாரமிக்க நபராக மஸ்க் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஶ்ரீராம் கிருஷ்ணன்?

ஶ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர். பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். 2021ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் என்ற மூலதன நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்தார். க்ளப் ஹவுஸில் முக்கிய பங்குதாரராக இருந்த ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் நிறுவனம், a16z என்றும் அழைக்கப்படுகிறது.

ஶ்ரீராம் கிருஷ்ணன் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பி டெக் படித்திருக்கிறார் என்கிறது அவர் பற்றிய விக்கிபீடியா பக்கம்.

Sriram Krishnan with Wife

கிருஷ்ணாவைப் போலவே அவரின் மனைவி ராமமூர்த்தியும் ஃபேஸ்புக், நெட்ஃபிளிக்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். True and Co. மற்றும் Lumoid போன்ற ஸ்டார்ட் அப்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

தொழில்நுட்பத்தில் அதிக நாட்டமுள்ள இந்த ஜோடி, யூடியூப் சேனல் வைத்திருப்பதுடன் பாட்காஸ்டும் நடத்துகின்றனர். அதில் டெக் ஜாம்போவான்களுடன் உரையாடல்களை மேற்கொள்கின்றனர். இதற்கு ‘தி ஆர்த்தி அண்ட் ஶ்ரீராம் ஷோ’ என்று பெயர்.

ஶ்ரீராம் a16z நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னனியில் எலான் மஸ்க்?

ஶ்ரீராம் எலான் மஸ்குடன் நெருங்கிய தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. DOGE எனப்படும் அரசு செயல்திறனை அதிகரிப்பதற்கான துறையின் துணை தலைவராக மஸ்க் செயல்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Elon Musk | எலான் மஸ்க்

ட்விட்டர் தளத்தை வாங்கிய எலான் மஸ்க், அதன் செயல்திறன் பாதிக்கப்படாமல் பல கட்டணங்களை அறிமுகப்படுத்தும் பணியில் இருந்தபோது அவருக்கு பல ஆலோசகர்கள் தேவைப்பட்டனர். அப்போது a16z நிறுவனத்தில் பணியிலிருந்த ஶ்ரீராமையும் ஆலோசகர் குழுவில் இணைத்தார் மஸ்க்.

முன்னதாக 2021ம் ஆண்டு ஶ்ரீராம் மற்றும் ராமமூர்த்தியின் க்ளப் ஹவுஸ் நிகழ்ச்சியில் மஸ்க் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. முதன்முறை இந்த ஜோடி ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிறுவனத்தை பார்வையிட்ட போது எலான் மஸ்குடன் அறிமுகம் உருவானதாகக் கூறப்படுகிறது. இதேப்போல பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கும் இவர்களது பாட்காஸ்டில் கலந்துகொண்டுள்ளார்.