Qவாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்திச் செய்ய வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இருக்கும் சிசிவிடி, வெப் கேமரா போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று பரிசோதிக்க முடியும். இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் நடத்தை விதி 93 (2) (a)-ன் படி ‘தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என்ற விதி நடைமுறையில் இருக்கிறது.
இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, விதி 93 (2) (a) கீழ், ‘தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என திருத்தம் செய்து மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டப் பிரிவில் குறிப்பிட்டுள்ள ‘காகித ஆவணங்களை மட்டுமே புகார் தாரர்கள் பார்க்க முடியும்’ என அதிகாரிகள் தெளிவுப்படுத்துகின்றனர்.

இதன் அடிப்படையில், வேட்புமனு படிவம், தேர்தல் முகவர்கள் நியமனம், முடிவுகள் மற்றும் தேர்தல் கணக்கு அறிக்கைகள் போன்றவை மட்டுமே பொதுமக்களால் பார்க்க முடியும். சிசிடிவி உள்ளிட்ட மின்னணு ஆவணங்கள் எதுவும் தனியாக அதில் குறிப்பிடப்படவில்லை. எனவே, மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது.
இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் அதிகாரிகள், `அனைத்து ஆவணங்கள் என்கிற போது, காகித ஆவணங்கள் – மின்னணு ஆவணங்கள் என இரண்டும் அதில் வருகிறதா என்றக் குழப்பம் இருக்கிறது. இந்த தெளிவின்மையை போக்கும் வகையில் மத்திய சட்ட அமைச்சகம் இத்தகைய திருத்தத்தை மேற்கொண்டிருக்கிறது. ஆனாலும், அனைத்து மின்னணு ஆவணங்கள் வழக்கம் போல், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு தரப்படும். மற்றவர்களுக்கு அது தேவையென்றால் நீதிமன்றத்தை அணுகிப் பெறலாம்” என விளக்கமளிக்கின்றனர்.
இதன் மூலம், வாக்குச்சாவடி மைய சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை யாரும் எளிதில் பார்வையிட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளும் சூழல் தடுக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த நடவடிக்கை பா.ஜ.க-என்.டி.ஏ அரசின் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி. இது மோடி அரசின் தேர்தல் விதிமுறைகளில் துணிச்சலான திருத்தம். இந்திய தேர்தல் ஆணையத்தின் நிறுவன ஒருமைப்பாட்டை அழிக்கும் திட்டமிட்ட சதி, ஜனநாயகத்தின் மீது மற்றொரு தாக்குதல். இதற்கு முன்னதாக, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கினார்கள். தற்போது தேர்தல் தகவல்களைச் சுற்றி கல்சுவரை அமைத்து, தேர்தல் குறித்த தகவல்களைத் தருவதை இறுக்கமாக்குகிறார்கள்.

வாக்காளர்கள் நீக்கம், மின்னணு வாக்கு இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை குறித்து காங்கிரஸ் கட்சி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய போதெல்லாம், தேர்தல் ஆணையம் அலட்சியமான தொனியில் பதில் அளித்தது, தீவிரமான புகார்களைக்கூட ஏற்கவில்லை.
தேர்தல் ஆணையம் பாதி – நீதித்துறை அமைப்பு பாதி என்ற போதிலும், அது சுதந்திரமாக செயல்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டின் மீதான மோடி அரசின் கட்டுப்பாடு, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீதான முக்கிய தாக்குதலாகும். அவற்றைப் பாதுகாக்க நாங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்.” என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “சமீப காலங்களில், தேர்தல் ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் தேர்தல் செயல்முறையின் நேர்மை சிதைவது தொடர்பான எங்கள் புகார்களுக்கு மிகப் பொருத்தமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.” என்றார்.
ஆனால், தேர்தல் ஆணையம், “இது வாக்காளர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக செய்யப்பட்டது” எனப் பதிலளித்திருக்கிறது.