TTV Dinakaran: டி.டி.வி.தினகரன் திடீர் டெல்லி பயணம்… பின்னணி என்ன?!

இரட்டை இலை தொடர்பான வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அ.ம.மு.க பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரனின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

டிடிவி தினகரன்

அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “டிசம்பர் 13-ம் தேதி டி.டி.வி.தினகரனுக்குப் பிறந்தநாள். அதையொட்டி, வடமாநிலங்களிலுள்ள சில கோவில்களில் தரிசனம் செய்வதற்காக டெல்லிக்குப் பயணமாகியிருக்கிறார். அதேவேளையில், டெல்லியில் சில பா.ஜ.க தலைவர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், ஓ.பி.எஸ்ஸின் கருத்தையும் கேட்டுவிட்டு இறுதி பதிலை தாக்கல் செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி இருவரும் அவரவர் பதிலை எழுத்துப்பூர்வமாக டிசம்பர் 19-ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதோடு, வரும் டிசம்பர் 23-ம் தேதி அவர்கள் இருவரையும் டெல்லியில் நேரில் ஆஜராகச் சொல்லியும் உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் டெல்லிக்குப் பயணமாகியிருக்கிறார் தினகரன்.

டெல்லியிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில், பா.ஜ.க-வின் இரண்டு தேசிய தலைவர்களைச் சந்திக்க நேரம் பெற்றிருக்கிறார் தினகரன். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் அ.தி.மு.க-வையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிடுகிறது பா.ஜ.க. இதுவரையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை. தேர்தல் நெருங்கும் வரையில் அதே மனநிலையில் எடப்பாடி தொடர்ந்தால், அவர் இல்லாத அ.தி.மு.க-வைப் பிரிக்கவும், புதியாக உருவாகும் அணியை பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர வைக்கவும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டணியில் ஓ.பி.எஸ்., தினகரன், பா.ம.க., தே.மு.தி.க ஆகியோருக்கும் இடமளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியை வளைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது.

தினகரன் – எடப்பாடி

அ.தி.மு.க வலுவுடன் தொடர்ந்தால், அவர்களிடம் செல்வதாகப் போக்குக்காட்டி, தி.மு.க கூட்டணியில் தங்களுடைய சீட் எண்ணிக்கையை காங்கிரஸ் கட்சி உயர்த்திக் கொள்ளக்கூடும். அதனால் பா.ஜ.க-வுக்கு தேசியளவில் ஆபத்து இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி எம்.பி-க்களை வெல்வதில் பா.ஜ.க-வுக்கு துளியும் விருப்பமில்லை. ஆக, வலுவில்லாத அ.தி.மு.க-வே காங்கிரஸின் சீட் பேரத்தை குறைக்க முடியும் என்பதால், அ.தி.மு.க-வை ‘வீக்’காக ஆக்குவதற்கு வியூகம் வகுக்கிறது டெல்லி.

2029-ல், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே அதைச் சட்டமாக்கவும் முயல்கிறது பா.ஜ.க. அந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், அதன் பதவிக்காலம் மூன்றாண்டுகள் மட்டுமே இருக்கும். அதாவது, வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றிப் பெற்றாலும்கூட அதன் ஆட்சிக்காலம் மூன்றாண்டுகள்தான். ஆக, 2029 தேர்தலுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்திக்கொண்டு, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க திட்டமிடுகிறது பா.ஜ.க. அதுதொடர்பாக கலந்தாலோசிக்கத்தான் டெல்லியில் பா.ஜ.க தலைவர்களை சந்திக்கிறார் தினகரன்.

‘இரட்டை இலை சின்னம் எடப்பாடியின் கையிலேயே இருப்பது சரியானதா…’, ‘சசிகலாவை தீவிர அரசியலுக்குள் இழுக்கலாமா…’, ‘நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்குள் வைத்திருப்பது லாபகரமானதாக இருக்குமா..’ என்பதையெல்லாம் ஆலோசிக்கவிருக்கிறார்கள்” என்றனர் விரிவாக.

டிடிவி தினகரன்

ஒருபக்கம் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், கட்சியிலேயே உறுப்பினராக இல்லாத ஓ.பி.எஸ்ஸின் கருத்தையும் கேட்க உத்தரவிடுகிறது நீதிமன்றம். அதை ஏற்று, ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி இருவரையும் நேரில் ஆஜராகச் சொல்லி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மற்றொருபுறம், சசிகலா மீதிருக்கும் அந்நிய செலவாணி வழக்கை விரைந்து விசாரித்து முடிக்குமாறு கீழமை நீதிமன்றத்திக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கிலிருந்து சசிகலாவுக்கு விடுதலைக் கிடைத்தால், அவரது அரசியல் ரீ என்ட்ரிக்கு பெரிய உத்வேகமாக அமையும். அ.தி.மு.க விவகாரத்தில் டெல்லியின் காய் நகர்த்தல்கள் வேகமெடுத்துள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கும் நிலையில், இன்னும் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறலாம். பொறுத்திருந்து பார்க்கலாம்.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/Neerathikaaram