தேர்தல் களத்தில் டொனால்ட் ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் இருவருமே கடைசி நாள் வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், டொனால்டு ட்ரம்ப் தனிநபர் தாக்குதல்களிலும், கமலா ஹாரிஸின் பின்னணி, பூர்விகம் குறித்த மிகவும் ஆணாதிக்க மனப்பான்மை, நிறவெறி கருத்துகளை வெளிப்படுத்தினார் என்பது உலகறிந்த உண்மை. ஒரு ஆப்ரிக்க அமெரிக்க, இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்கா வாக்களிக்குமா? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று என்று மார்தட்டிக் கொள்ளும் அந்நாட்டில் இன்னும் நிறவெறியும், பாலின பேதமும் புரையோடிக் கிடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
கருக்கலைப்பு விவகாரம், கமலா ஹாரிஸ் மீதான பாலினம் தொடர்பான தாக்குகுதல் என இந்த தேர்தலில் பாலினம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. தேர்தல் முடிவு வெளியானதுக்குப் பிறகு அமெரிக்காவில் 4B இயக்கத்தில் அமெரிக்கப் பெண்கள் அதிரடியாக இணைந்து வருகின்றனர்.
‘ரீக்ளைம் தி லாங்குவேஜ்’-ன் பெண்ணிய எழுத்தாளர் லீ மின்-கியோங், ”தென் கொரியாவில் பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஆண்களைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார். அதைத் தொடர்ந்து வீட்டு வேலைகளுக்கு பெண்களை நிர்பந்திப்பது, ஒரே வேலைக்கு ஆண்களைவிட பெண்களுக்கு குறைந்த ஊதியம் கொடுப்பது, தொடர் பாலியல் அத்துமீறல்கள் ஆகியவை பெண்களுக்கு மத்தியில் ஒரு அமைப்பை ஒருங்கிணைத்து வந்தது. இதைத் தொடர்ந்து, தென் கொரியாவின் ரயில் நிலைய குளியலறையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அப்போது இந்த விவகாரம் விவாத களத்துக்கு கொண்டுவரப்பட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணியம் சார்ந்து இயங்குபவர்களை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டது. அதன் விளைவாக 2010-ல் உருவானதுதான் 4B இயக்கம். அதாவது இந்த இயக்கத்தின் கோட்பாடு ‘பியோனே (டேட்டிங் இல்லை), “பிசெக்சு” (உடலுறவு இல்லை), “பிஹோன்” (திருமணம் இல்லை) மற்றும் “பிச்சுல்சன்” (தாய்மையடைவதில்லை).
ஆஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் பாலினம் மற்றும் பெண்கள் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் மிங் காவோ, “பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் முறையான பாலின சமத்துவமின்மை ஆகியவற்றின் கலவையான எதிர்ப்பால் உருவானதுதான் இந்த 4B இயக்கம். ஆண்கள் இல்லாமல் ஒரு மாற்று வாழ்க்கை வாழ வேண்டும் என, தென் கொரியாவில் உள்ள ஆணாதிக்கத்தை சவால் செய்ய பெண்கள் எடுத்த ஒரு தீவிர முயற்சிதான் இது” என்றார். இதன் ஒருபகுதியாகதான் அழகு சாதனங்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை புறக்கணிப்பு போன்றவைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் தென் கொரியாவில்தான் உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு விகிதம் பதிவாகியிருக்கிறது. மேலும் கிட்டத்தட்ட 42% குடும்பங்கள் ஒரு நபர் குடியிருப்பாளராக மாறியிருக்கிறது. சியோலில், 40 சதவிகிதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கடந்த ஆண்டில், எந்தப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் பெண்களின் 4B இயக்கம், உடலுறவில் பெண்களின் ஆர்வமின்மை ஆகியவை முதன்மைக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. பெண்கள் தங்களை 4B உடன் வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்ளாவிட்டாலும், அவர்களின் உணர்வுகள் 4B எண்ணத்தை பிரதிபலிக்கின்றன .
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வென்றது பெரும்பாலான பெண்களுக்குப் பிடிக்கவில்லை என்பது புலனாகிறது. ட்ரம்பின் வெற்றி ஆண் வாக்காளர்களால் நடந்திருக்கிறது. அது பெண்கள் இனப்பெருக்க உரிமை மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பு என பரவலாக பெண்கள் கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். கரு கலைப்பு விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் ட்ரம்ப் எடுத்ததும், இந்த விவகாரத்தில் ட்ரம்பின் நிலைபட்டுக்கு ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், அதனால், அதை அனைத்து பிரசார களத்திலும் ட்ரம்ப் பிரசார ஆயுதமாக பயன்படுத்தியதும் பெண்களை பெரிதாக பாதித்திருக்கிறது.
ஒரு பெண்ணைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் தங்களை ஆளலாம் என்கிற சில அமெரிக்க ஆண்களில் நம்பிக்கை இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. அதனால்தான் ஆண்களைப் புறக்கணிக்கும் இந்தப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். இந்த வாரத்தின் கடந்த 48 மணி நேரத்தில் 5 லட்சத்துக்கு அதிகமான பெண்கள் கூகுளில் 4B குறித்து தேடியிருக்கிறார்கள். பலரும் இந்த இயக்கத்தில் இணைந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். பெண்கள் பலரும், “அமெரிக்கப் பெண்களே இது 4B-க்கான நேரம். இதில் நாம் இணைந்து நமது உரிமைகளை மீட்டாக வேண்டும்” என அழைப்பு விடுத்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb