US Election: “என் அம்மாவின் தைரியம்தான் என்னை உருவாக்கியது!” – கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் நாளை மறுநாள் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பும் தங்களின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கமலா ஹாரிஸ் vs டொனால்டு டிரம்ப் – US Election

குறிப்பாக, உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவங்களின் நிறுவனரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற வேண்டும் என கடுமையாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு, முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராக வெற்றி பெறுவாரா என்பது ஒருபக்கம் இருந்தாலும், கமலா ஹாரிஸ் வெற்றியின் மூலம் அமெரிக்காவுக்கு முதல் பெண் அதிபர் கிடைப்பாரா என்பது தேர்தல் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் தனது தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “என்னுடைய அம்மா டாக்டர் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ், தனது 19 வயதில் இந்தியாவிலிருந்து தனியாக அமெரிக்கா வந்தார். அவரின் தைரியமும், உறுதியும்தான் இன்றைக்கு என்னை இந்த நிலைக்கு உருவாக்கியது.” என்று பதிவிட்டிருக்கிறார்.