“பாப்பையா ஐயாகிட்ட சொன்ன ஒரு ஓகேல என் பட்டிமன்ற பயணம் தொடங்கியது…” – பகிரும் பட்டிமன்ற ராஜா

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு நம் வீட்டிற்குச் சொந்தகாரர்கள் வருகிறார்களோ… இல்லையோ? நிச்சயம் இவர் வந்துவிடுவார். இவரில்லாமல் அன்றைய காலை தமிழ் குடும்பங்களில் கழியவே கழியாது. இந்த இன்ட்ரோவுடன், ‘பட்டிமன்றம்’ என்ற கீவேர்டை மூளையில் சற்று ஓட விட்டு பாருங்கள். இப்போது பளீச்சென்று இவர் நியாபகத்திற்கு வந்துவிடுவார். ஆம்… இந்த இன்ட்ரோ ‘பட்டிமன்ற ராஜா’விற்கானதுதான். தீபாவளி காலையின்போது, இவரை டிவியில் மட்டும் பார்க்காமல், அவருடன் கதைக்கவும் செய்யலாம்… வாங்க…

உங்க சின்ன வயசு பத்தி…

உங்க சின்ன வயசு பத்தி…

“வைகை நதிக்கரை… நாலு எல்லையிலும் முனியாண்டி உக்காந்திருக்க… இந்து, முஸ்லீம், கிறிஸ்து எனச் சமத்துவம் ததும்பும்… மதுரையில் உள்ள 300 வீடுகள் கொண்ட கீழமாத்தூர் கிராமம்தான் என்னோட கிராமம். என்னோட அம்மா, அப்பா ரெண்டு பேருமே டீச்சர். மொத்தம் நாலு பசங்க. அதுல நான்தான் மூத்தவன். சின்ன வயசுல ரொம்ப ரொம்ப சமத்து பையன். இல்லைனா, அப்பாகிட்ட வீட்ட சுத்தி ஓட ஓட அடிவாங்க வேண்டியதுதான். அதுவும் நான் பெரிய பையன் வேற… அப்போ என் நிலைமைய யோசிச்சு பாருங்க.

அஞ்சாவது வரைக்கும் எங்க ஊர்ல இருக்க தொடக்க நிலை பள்ளிக்கூடத்துலேயே படிச்சேன். ஆறாவது படிக்கறதுக்கு முதல்முறையா நானா டவுன் பஸ் புடிச்சு பள்ளிக்கூடத்துக்குப் போக ஆரம்பிச்சேன். அதுவரைக்கும் ஊருக்குள்ளேயே சுத்திகிட்டு இருந்த எனக்கு, அது பயம் கலந்த ஒரு வித்தியாசமான… இப்போ வரைக்கும் மறையாத அனுபவம்.

ஸ்நாக்ஸ், பொழுதுபோக்கு…

என்னோட ஆரம்ப வாழ்க்கை ரொம்ப எளிமையானது. 5 பைசா தான் பாக்கெட் மணி. அப்போ அதுவே எங்களுக்கு ரொம்ப பெருசா தெரிஞ்சுது. அந்த காசை வெச்சு இலந்த வடை, ஜவ்வு மிட்டாய், தேன் மிட்டாய் மாதிரியான ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடுவோம். இல்லைனா, ஊருல இருக்க மரங்கள்ல இருந்து கொய்யாப்பழம், கொடுக்காய்ப்புளி பறிச்சு சாப்பிடுவோம். அதுவும் ஸ்நாக்ஸ் கணக்குல தான் வரும். அதுங்களோட டேஸ்ட் எல்லாம் அப்படி அள்ளும்.

எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்க சமயநல்லூரின் டூரின் டாக்கீஸ்தான் எங்களுக்கு பொழுதுபோக்கு. நான் எம்.ஜி.ஆர் ரசிகன். அவரோட ஸ்டண்ட், ஆக்‌ஷன் ரொம்ப பிடிக்கும். அவரோட அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் படங்களை நிறைய தடவைப் பாத்துருக்கேன். இதை தவிர, காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் படங்களும் ரொம்ப பிடிக்கும்.

புத்தகமும், நானும்!

புத்தகமும், நானும்!

சின்ன வயசுல என் வயசு பசங்க எல்லாம் ரெண்டு டீமா பிரிஞ்சு லப்பர் பந்து கிரிக்கெட் விளையாடுவாங்க. எனக்கும் விளையாட்டுல ரொம்ப ஆர்வம். ஆனா, ஆர்வம் இருந்து என்ன பண்ண? எனக்கு சரியா விளையாட வராது… யாரும் விளையாட சேர்த்துக்கமாட்டாங்க. அதனால, என் தம்பிகள் டீம்ல விளையாட, நான் வெளிய அம்பயரா சிக்ஸ், ஃபோர் சொல்லிட்டு இருப்பேன்.

இது ஒரு கட்டத்துல போர் அடிக்க, பள்ளிக்கூட நூலகத்துல நியூஸ் பேப்பர், பத்திரிகை புக்குங்கள் படிக்க ஆரம்பிச்சு… கொஞ்ச கொஞ்சமா மத்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். விளையாட்டு மட்டும்தான் வராது. மத்தப்படி, படிப்புல படு கில்லாடி நான். அதனாலேயே, எல்லா டீச்சர்களுக்கு நான் செல்லப் பிள்ளை.

இலக்கிய மன்ற செயலாளர்…

என்னதான் படிப்புல கெட்டி…டீச்சர்களின் செல்ல பிள்ளைனாலும், எனக்கு கூச்ச சுபாவம். அதனால, எதுக்கும் முன்ன போய் நிக்கமாட்டேன். ஆனா, டீச்சர்களா பாத்து என்னோட பத்தாம் கிளாஸ்ல என்னை இலக்கிய மன்ற செயலாளரா ஆக்குனாங்க. அப்போதுதான் முதன்முதல்ல மேடைகளை நிக்கறது… கொஞ்சம் கொஞ்சம் பேசறது எல்லாம் பழக்கம்.

அந்த இலக்கிய மன்றத்துலதான் என்னோட வாழ்க்கையோட முக்கிய நிகழ்வு நடந்துச்சு. அங்கதான், சாலமன் பாப்பையா ஐயாவை முதன்முதல்ல பார்த்தேன். அவர் பேச பேச அப்படி கைதட்டல்கள். ‘ஒரு பேச்சுக்கு இவ்ளோ கைதட்டலா’னு அப்போ தான் எனக்கு அவர் மேல ஈர்ப்பு வந்துச்சு. அதுகப்புறம் அவரைப் பத்தி தேடி தேடி தெரிஞ்சுகிட்டேன்.

முதல் மார்க் மாணவன்

முதல் மார்க் மாணவன்

1976-ம் ஆண்டு. எஸ்.எஸ்.எல்.சி-ல ஸ்கூல்ல நான் தான் முதல் மார்க். அப்போ எலெக்டிவ்னு ஒரு பாடம் இருக்கும். அதுல நமக்கு புடிச்ச பாடத்தை எடுத்து படிச்சுக்கலாம். எனக்கு வரலாறு ரொம்ப பிடிக்கும். நான் எலெக்டிவ்ல வரலாறு எடுத்து தான் படிச்சிருந்தேன். அந்தப் பாடத்துல நான் மாவட்டத்துலேயே முதல் மாணவன். அதுக்காக எனக்கு வெள்ளில ஒரு பரிசு கொடுத்தாங்க.

இப்போ மாதிரி அப்போ பன்னிரெண்டாம் வகுப்பு இல்லை. பி.யூ.சி படிப்பு தான். அமெரிக்கன் காலேஜ்ல படிச்சேன் அட்வான்ஸ்ட் இங்கிலீஷ், வணிகவியல், பொருளாதாரம் படிச்சேன். தமிழ் மீடியம்ல படிச்சுட்டு, அப்போ இங்கிலீஷ்ல படிக்கணும்ங்கறதால, என்னால அதிக மார்க் எடுக்க முடியல.

அப்புறம் காலேஜ்ல பி.காம் எடுத்து படிச்சேன். அப்பவும் கஷ்டம் தான். முதல் ஆறு மாசம் அழுதேன். அப்புறம் எப்படியோ அதுல இருந்து தேறி வந்து பி.காம்ல மொத்தம் 58 மாணவர்கள்ல நான் தான் முதல் மாணவன்.

கிளாஸ் கட்…

என்னோட காலேஜ்ல படிச்சவங்க எல்லாம் வசதியான மாணவர்கள். ஆனா, நான் எளிமையான குடும்பத்துல இருந்து வந்தவன். அவங்களோட சேர எனக்கு தயக்கம் இருக்கும். ஆனா, அந்த மாணவர்கள் அப்படி எந்த வித்தியாசமும் பாக்கமாட்டாங்க. நான் நல்ல படிக்கற பையன்னு அவங்களுக்கு என் மேல நல்ல அபிப்ராயம்… என்னை நல்லா பாத்துக்கவும் செய்வாங்க.

எல்லா மாணவர்கள் மாதிரி எனக்கும் காலேஜ் கட் அடிச்ச வரலாறு இருக்கு. ஆனா, என்னன்னா நான்தான் கிளாஸ் லீடர். பசங்க எல்லாம் சேர்ந்து கட் அடிக்கறதுக்கு முன்னாடி, டீச்சர் கிட்ட நான் போய் சொல்லுவேன். அவங்களுக்கு நான் பிடிச்ச மாணவர்ங்கறதால ஃபுல் அட்டனன்ஸ் போட்டு அனுமதி கொடுத்துருவாங்க. அப்படி கட் அடிச்சுட்டு போய் ‘நீயா’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’னு நிறைய படங்கள் பாத்திருக்கோம்.

வேலை கிடைக்கவில்லை

வேலை கிடைக்கவில்லை

இப்போ இருக்க மாதிரி, அந்த காலத்துல கரியர் கைடன்ஸ் எல்லாம் கிடையாது. நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆனா பேங்க் வேலை கிடைக்கும். என்னதான் நான் முதல் மாணவனா இருந்தாலும், எனக்கு ஏனோ அந்த வேலை கிடைக்கல. எனக்கு அப்புறம் படிச்ச முடிச்ச என் தம்பிக்குக் கூட ரெண்டு ஆஃபர் லெட்டர் வந்துருச்சு. ஆனால், எனக்கு ஒரு வேலையும் கிடைக்கல. அப்போ எல்லாம் மன உளைச்சல் ரொம்ப அதிகமா இருக்கும்.

எனக்கு மேல் படிப்பு படிக்க மாசம் ரூ.1,300-க்கு ஸ்காலர்ஷிப் கிடைச்சுது. ஆனா, அதுக்கு அப்ளை பண்ண 300 ரூவா இல்லை. அதனால என்னால அதையும் அப்ளை பண்ண முடியல.

அப்புறம் என்னோட பத்தாவது மார்க் வெச்சு வேலை தேடுனப்போ தபால் துறையில வேலை கிடைச்சுது. அதுகப்புறம் வங்கியிலயும் காசாளாரா வேலை கிடைச்சுது.

பாப்பையாவும் நானும்!

இலக்கிய மன்றத்துல நான் அவரை எப்போ பாத்தேனோ, அப்போ இருந்து அவர் கூடவே தான் இருப்பேன். பி.யூ.சிக்கு சேரும்போது, ஃபீஸ் 84.65 ரூவா. ஆனா, அந்த காசு கட்ட என் கிட்ட பணமில்லை. அப்போ, ‘என்னடா வருத்தமா இருக்க?’னு கேட்ட சாலமன் பாப்பையா ஐயாகிட்ட, காசு இல்லாததை பத்தி சொன்னேன். அவரு கொஞ்சம் கூட யோசிக்காம, முழு 100 ரூவா நோட்டை எடுத்து கொடுத்தாரு. அதுவரைக்கு 100 ரூவாயை நான் பாத்ததே இல்லை. அவர் கொடுத்த காசுல தான் என்னோட பி.யூ.சி படிப்பு தொடங்குச்சு.

பாப்பையாவும் நானும்!

ஐயா எங்க போனாலும் சரி… அவரோட பேக்கை தூக்கிட்டு கூடவே போவேன். அப்போதான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சுது. 1991-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ம் தேதி. சாலமன் பாப்பையா ஐயா தலைமையில பட்டிமன்றம். அன்னைக்கு வர வேண்டிய ஒரு பேச்சாளர் வரல. ஐயா என்ன நினைச்சாருனு தெரியல… ‘நீ பேசறியா?’னு கேட்டாரு. நான் ‘ஓகே’ சொல்ல அப்போ ஆரம்பிச்சதுதான் என்னோட பட்டிமன்ற பயணம். என்னோட முதல் தலைப்பு ‘குடும்ப முன்னேற்றத்திற்குக் காரணம் கணவனா? மனைவியா?’.

பட்டிமன்ற பேச்சாளர்…

அப்போயிருந்து நான் தொடர்ந்து மேடைகள்ல பேச ஆரம்பிச்சேன். ஒரு தலைப்பு கொடுத்தாங்கன்னா, அதை பத்தி கொஞ்சம் யோசிப்பேன். அது சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பேன். சில குறிப்புகளை எடுத்துக்கொள்வேன். அப்புறம் என்ன… பேச்சு ரெடி.

இப்போ பட்டிமன்ற நடுவராக இருந்தாலும், பேச்சாளரா இருப்பது தான் எனக்கு ரொம்ப ஈசி. கூட்டம் கலையாம பாத்துக்கணும், யாராவது தவறா பேசறாங்களானு கவனிக்கணும்னு நடுவர்ங்கறது ரொம்ப பெரிய பொறுப்பு.

படங்கள்…

படங்கள்…

இதுவரைக்கு 25-க்கும் அதிகமான படத்துல நடிச்சுருக்கேன். இன்னும் நிறைய படங்கள்ல கூப்பிடுறாங்க. ஆனா, நான் எதுலயும் இப்போதைக்கு கமிட் ஆகல.

எங்கள் தீபாவளி!

தீபாவளி அன்னைக்கு தீபாவளி பத்தி பேசாம விட்டா எப்படி? இப்போ இருக்க மாதிரி எங்க சின்ன வயசு தீபாவளிகள்ல பட்டாசுகள் குவிஞ்சு கிடக்காது. ஒண்ணு, ரெண்டு வெடி தான் இருக்கும். அதுவும் கம்பி மத்தாப்பு, புஸ்வானம், சங்கு சக்கரம் தான் பெரிய வெடிகள். இது எல்லா தீபாவளிகளுக்கு கிடைக்காது. ஆனா, அப்போதைக்குக் கிடைக்கற பட்டாசுகளை வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.

ஓலை வெடிய சொல்ல மறந்துட்டேன் பாருங்க. அதுல இருந்து கொஞ்சம் தான் சத்தம் வரும்… ஆனா, அது வெடிக்கும்போதும் வர்ற சந்தோஷம் பெருசா இருக்கும். எங்களுக்கு அப்போ ஒரு ஆச்சரியமான வெடினா, அது ‘ரயில் பட்டாசு’. ரெண்டு கம்பிகளுக்கு நடுவுல போயி வெடிக்கும்.

தீபாவளினு சொன்னதும் பட்டாசு பாத்தாச்சு… பலகாரம் இல்லாம எப்படி? இன்னைக்கு தினம் தினம் சாப்பிடற இட்லி, வடை எல்லாம் எங்களுக்கு அப்போ பீட்சா, பர்கர் மாதிரி. அவ்ளோ டிமாண்ட் இருக்கும் அதுக்கு.

தொழில்நுட்பம்…

தொழில்நுட்பம்…

இன்னைக்கு இருக்க மாதிரி எதுவுமே அன்னைக்கு இல்லைனாலும் ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை இருந்துச்சு. இன்னைக்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துருச்சு. எல்லாரும் பரபரப்பா இருக்காங்க. ஒரு படம் ரிலீஸ் ஆனா கூட, உடனே ரிவ்யூ வந்துருது. அதனால வாழ்க்கைல இப்போ சஸ்பன்ஸ், ஆச்சரியம், சந்தோஷம்னு எதுவும் இல்லை. அந்த வாழ்க்கைய இப்போ நிறைய பேர் மிஸ் பண்றோம்.

எது எப்படியோ… அருமையான மனைவி, அன்பான இரண்டு பசங்கனு வாழ்க்கை ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சியா’ போயிட்டு இருக்கு” என்று டிரேட் மார்க் சிரிப்புடன் முடிக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX