“மதுரையே கொண்டாடும்போது, நான் மட்டும்..!” – `அயோத்தி’ மந்திரமூர்த்தியின் மறக்க முடியாத தீபாவளி

மந்திரமூர்த்தி… பெயருக்கு ஏற்றார்போல இயக்குநர் மந்திரமூர்த்தி உண்மையில் தன்னுள் பல மந்திரங்களை வைத்திருப்பார் போல. அதனால்தான், திருநெல்வேலியில் பிறந்து, ஈரோட்டில் மஞ்சள் வியாபாரம் தொடர்பாக ஒரு வேலை செய்து கொண்டிருந்தவரை, அயோத்தி திரைப்படம் திட்டமிட்டு சென்னைக்குத் தூக்கி வந்திருக்கிறது. வடமாநிலமான உ.பி-யின் அயோத்தியிலிருந்து தீபாவளி விடுமுறையில் தென்மாநிலமான ராமேஸ்வரம் வரும் ஒரு குடும்பம், எதிர்பாராத விபத்தைச் சந்திக்கிறது.

அந்த விபத்தும், அதைச் சுற்றி நடக்கும் சூழலும், தமிழ்நாட்டின் பெருமையும், கூடவே சமூக நல்லிணக்கமும் சேர்த்து… ‘தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளித்து முடித்ததும் வருமே ஒரு பசி… அந்தப் பசிக்கு, நம் பாட்டியின் கைப்பக்குவத்தில் சாப்பிட்ட அந்த தீபாவளி பலகாரம் போல’ காலத்துக்கும் இனிமையான நினைவை கொடுக்கும் படமாகவே அயோத்தியை உருவாக்கியிருப்பார். அயோத்தி திரைப்படம் வெளியாகி ஒருவருடம் கடந்தாலும் இன்றும் அந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ஏதோ ஒருவகையில் கலக்கமடைந்து, நெகிழ்ச்சியாக பதிவிடுவதை பார்க்கிறோம்.

அதனால், அடுத்த படைப்புக்கான எழுத்துப்பணியில் இருந்த இயக்குநர் மந்திரமூர்த்தியை கொஞ்சம் தொந்தரவு செய்யலாம் என தொலைபேசியில் அழைத்தோம். ‘இப்போ பேச முடியாது பாஸ்…. கொஞ்சம் வேலையில இருக்கேன்… அப்பறம் பேசவா’ என்றார். ‘தீபாவளி பற்றி ஒரே ஒரு கேள்விதான்’ எனத் தொந்தரவைத் தொடர்ந்தோம்… சில வினாடிகள் மௌனத்துக்குப் பிறகு… ‘என்ன கேள்வி?’ எனக் கேட்டவரிடம், ”உங்க வாழ்க்கையில மறக்க முடியாத தீபாவளி எது? ஏன்?” என்ற கேள்வியை முன்வைத்தோம்!

இயக்குநர் மந்திரமூர்த்தி

அதற்கு அவர்… “தீபாவளி என்றாலே ஒரு ஸ்பெஷல் பண்டிகைதான். சின்ன வயசுலலாம்… தீபாவளிக்கு இன்னும் 10 நாள் இருக்கு… 8 நாள் இருக்கு என நாளை எண்ண ஆரம்பிச்சிருவேன். ஃபிரண்ட்ஸ் கூட டிரஸ் எடுக்கப் போறது, பட்டாசு வாங்கப் போறதுனு ரொம்ப ஸ்பெஷலா அந்த 10 நாளும் போகும். ஆனா அதையெல்லாம் தாண்டி எனக்கு ரொம்ப ஸ்பெஷலான தீபாவளினா அது அயோத்தி கதை எழுதினதுக்கு அப்புறம் வந்த அந்த தீபாவளிதான். அயோத்தி கதை ஒரு நாள்ல, அதுவும் தீபாவளி அன்னைக்கு நடக்குற கதை. அதனால உண்மையிலேயே ஒரு தீபாவளி அன்னைக்கு மதுரை எப்படி இருக்கும். மதுரை மார்ச்சுவரி எப்படி இருக்கும்னு யோசிச்சேன்…

அதுக்காக அயோத்தி கதை நடக்குற இடங்கள் எல்லாம் எப்படி இருக்கும்னு தீபாவளி அன்னைக்கு மதுரை ஃபுல்லா சுத்திட்டு இருந்தேன். உண்மையிலேயே தீபாவளி அன்னைக்கு மதுரை மார்ச்சுவரில என்னலாம் நடக்கும்… எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்க தீபாவளி அன்னைக்கு மதுரை மார்ச்சுவரில உட்கார்ந்திருந்தோம். ஊரே தீபாவளி கொண்டாடிட்டு இருக்கும்போது, அந்த மார்ச்சுவரில இருந்ததுலாம் மறக்கவே முடியாது.

இயக்குநர் மந்திரமூர்த்தி

இப்போ இல்ல என் வாழ்க்கை முழுதுமே தீபாவளினாலே, அயோத்தி கதைக்காக மதுரைல சுத்திட்டு இருந்தது தான் நியாபகத்துக்கு வரும். என்னால அதை மறக்கவே முடியாது” என்றார். அயோத்தி திரைப்படம் மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது என்பதையும் கடந்து, மனிதத்தை போதித்திருக்கிறது. மீண்டும் மற்றொரு கதைகளத்துடன் வெள்ளித்திரையில் அயோத்தியை தாண்டிய இமயம் தொட இயக்குநர் மந்திரமூர்த்திக்கு விகடன் சார்பில் வாழ்த்துகள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX